அதிரடி செந்தில் பாலாஜி; அசராத வேலுமணி! - உச்சக்கட்ட மோதலில் கோவை தேர்தல் களம்

0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் ஈர்த்திருப்பது கோவை தான். சட்டசபை தேர்தலில் 10 க்கு 10 தொகுதிகளையும் கைப்பற்றி, ``இப்போதும் கோவை முழுவதையும் நாங்க தான் கைப்பற்றுவோம். கோயம்புத்தூர் எங்க கோட்டை.” என்று தி.மு.க-வுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி.

கோவை

``நம்ம தான் ஜெயிக்கறோம்.. நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்” என்று அந்தக் கோட்டையில் சமீப காலமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி குரல். அ.தி.மு.க – தி.மு.க போட்டியை கடந்து, தங்களது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க வேலுமணியும், செந்தில் பாலாஜியும் மோதும் களமாக மாறியுள்ளது கோவை.

தனது சொந்த மாவட்டமான கரூரில் சிட்டிங் அமைச்சரை நேரடியாக சந்தித்து வீழ்த்தியதுடன், அங்கு அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார் செந்தில் பாலாஜி. மறுபுறம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலினின் கோபத்துக்கு உள்ளாகி அவரின் வியூகங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, தான் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றதுடன் கோவை முழுவதையும் அ.தி.மு.க வசமாக்கினார் வேலுமணி.

வேலுமணி - செந்தில் பாலாஜி

இருவரும் கடந்த காலங்களில் தேர்தல் அரசியலில் சொல்லி அடித்தவர்கள் தான். அப்படிப்பட்ட இருவரும் மோதுவதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கோவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இப்போது வரை செந்தில் பாலாஜியோ, வேலுமணியோ இருவரும் பரஸ்பரம் பெயரை உச்சரித்து கடுமையாகக் தாக்கிக் கொண்டதில்லை. வெற்றிக்காக இருவரும் போடும் வியூகங்கள்தான் போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது. பூத் கமிட்டி வலுவாக இல்லை, உள்ளடி வேலைகள் போன்றவை கோவை தி.மு.க-வின் அடிப்படை பிரச்னைகள். முதல் வேலையாக பூத் கமிட்டியை தூசி தட்டி வலுவாக்கினார்.

செந்தில் பாலாஜி

ஆனால், தேர்தல் அறிவித்ததுமே உள்ளடி உள்குத்துகள் ஓயவில்லை. வேட்பாளர் தேர்வில் இருந்து, கூட்டணிக்கு சீட் ஒதுக்கியது வரை அனைத்திலும் பஞ்சாயத்துதான். தி.மு.க உடன்பிறப்புகளும், கூட்டணி கட்சியினரும் ஆங்காங்கே தனித்து போட்டியிட்டனர்.

உள்ளடி வேலை காரணமாக ஏற்கெனவே திட்டமிட்டபடி, கரூரில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டவர்களை கோவையில் இறக்கினார். பூத் கமிட்டி, பிரசாரம், பணப்பட்டுவாடா என்று அனைத்துக்கும் தனித்தனியாக டீம் போடப்பட்டது. பிரசார வியூகங்களின் எப்போதும் அ.தி.மு.க தான் ஸ்கோர் செய்யும்.

கோவை தி.மு.க

இந்த முறை அதை சரி செய்ய ஒவ்வொரு நாளும் பொறுப்பாளர்கள் முதல் பிரசாரத்துக்கு வரும் கடைகோடி தொண்டர்கள் வரை அனைவரையும் சிறப்பாக கவனித்தனர். இதனால் அதிருப்தியில் விலகியிருந்த உடன்பிறப்புகளும் ஒரு கட்டத்தில் இணைந்து உற்சாகமாக பணியாற்ற தொடங்கினர்.

அ.தி.மு.க-வினர் தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பதுடன் அவ்வபோது பரிசுகளை கொடுத்து கோவை மக்களிடம் ஸ்கோர் செய்வார்கள். அதன் காரணமாக ஹாட்பாக்ஸ், கொலுசு, குத்துவிளக்கு, குக்கர், வேட்டி சேலை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை இறக்கினர்ராம். அ.தி.மு.கவில் கற்ற வித்தைகளை, அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தி அதிரடித்தார்.

ஹாட்பாக்ஸ்

சட்டசபை தேர்தல் முடிந்து அமைதியோ அமைதியாக இருந்த, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களே கடுப்பாகி வாரம் 2 முறை அதிகாரிகளிடம் மனு அளிப்பதில் தொடங்கி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களின் டெபாசிட் தொகையை முடக்கி பறிமுதல் செய்தது, அ.தி.மு.க வேட்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் போட்டது, பரிசு, கரன்ஸி மழை கொட்டியது போன்றவை ரத்தத்தின் ரத்தங்களை உளவியல் ரீதியாக தாக்கியது. ஆரம்பத்தில் அ.தி.மு.க சற்று அடக்கி வாசித்தது போலதான் தெரிந்தது.

வேலுமணி

வேட்பாளர் தேர்வு, மேயர் வேட்பாளர் குளறுபடி போன்ற பிரச்னைகள் அ.தி.மு.க-விலும் எதிரொலிக்கவே செய்தன. ஆனால், இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ.. தேர்தல் நெருங்க நெருங்க தி.முக-வுக்கு கடுமையான போட்டியை கொடுக்க தொடங்கினர்.

தி.மு.க கொடுத்த கொலுசு தரமில்லை என்று ஆய்வக முடிவுகளை எடுத்து பாஜகவுடன் இணைந்து அதை அம்பலப்படுத்தினர். தி.மு.க-வினர் எவ்வளவு கொடுக்கிறார்களே, அதற்கு இணையாக தொகையை கொடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்து அதனை செயல்படுத்தியும் வருகிறார்களாம்.

அ.தி.மு.க

செல்வாக்கான நபர்கள் ஒரு படி மேலே சென்று, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பாத்திர பண்டங்களை இறக்கி வருகின்றனராம். சில இடங்களில் தி.மு.க-வை விட அதிகமாகவும் கொடுக்கிறார்களாம்.

ஒருவகையில் தேர்தல் அரசியலில் தனது ஆளுமையை நிரூபித்து, பவர்புல்லான அமைச்சர் இமேஜை தக்க வைக்க செந்தில் பாலாஜிக்கு இந்த வெற்றி அவசியமாகிறது. ஆளுங்கட்சி இல்லை என்றாலும், கோவையை கோட்டையாக வைத்திருப்பதை தனது பலமாக கருதுகிறார் வேலுமணி.

கோவை மாநகராட்சி

கோவையை கைவிட்டால், செந்தில் பாலாஜியின் தொலை நோக்கு பார்வை அ.தி.மு.கவை மொத்தமாக தி.மு.க பக்கம் இழுத்துவிடும் என்ற அபாயமும் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே தேர்தல் களத்தில் இறங்கி அடிப்பது என்று முடிவு செய்திருக்கின்றனர்.

கோவையை கரைத்து குடித்திருப்பதால், அ.தி.மு.க பணப்பட்டுவாடாவில் பெரிய பிரச்னை ஏதுமில்லை. ஆனால், தி.மு.க.விடம் முறையான தரவுகள் இல்லை. இதனால் சில இடங்களில் பணப்பட்டுவாடா செய்ய திணறினர். ஒரு கட்டத்தில், “ஆனது பார்த்துக்கலாம்.. முடிஞ்சவரை எல்லா இடத்துலயும் கொடுங்க.” என்று அனைத்துத் தரப்பு வாக்காளர்களுக்கும் கொடுத்து வருகின்றனர்.

கோவை

அதேநேரத்தில் அ.தி.மு.கவில் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் தவிர பிற இடங்களில், “நம்ம கட்சி வாக்கை மட்டும் தக்க வைச்சா போதும்.” என்று தி.மு.க-வுக்கு ஈடுகொடுக்க திணறி வருகின்றனர்.

சில இடங்களில் இருவரும் சம பலத்துடன் இருந்தாலும், ஆளுங்கட்சி என்பது தி.மு.க-வுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது. தனது அரசியல் அனுபவமும், பழகிய கோவை களமும் கைவிடாது என்று வேலுமணி கணக்கு போடுகிறார். மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கோவை மினி கூவத்தூராக மாறவும் வாய்ப்புள்ளது என்பதுதான் கள நிலவரமாக உள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/YjBwQlC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*