திருச்சி-ராசயநாயக்கன்பட்டி வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. தினமும் கடைசி டிரிப் முடிந்தவுடன் இரவு விராலிமலை-திருச்சி பைபாஸ் சாலை சுங்கச்சாவடி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு, டிரைவர் மற்றும் நடத்துநர் இருவரும் பேருந்தில் உறங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில், நேற்று அதிகாலை பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துநரின் கையிலிருந்த டிக்கெட் வசூல் பணப்பையை இளைஞர்கள் மூன்று பேர் பறித்துக்கொண்டு ஓட முயன்றிருக்கின்றனர். சுதாரித்துக் கொண்ட அந்த நடத்துநர் பணப்பையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களுடன் மல்லுக்கட்டியுள்ளார். இதற்கிடையே நடத்துநர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அருகே இருந்தவர்கள் உதவிக்கு வந்திருக்கின்றனர். நடத்துநர், பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞர்களைக் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் செந்தில்குமார் (24) அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் புங்கனூரைச் சேர்ந்த சஞ்சய்குமார்(21) திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த அபினாஷ்(20), நரேந்திரன்(22) எனத் தெரியவந்தது. சஞ்சய்குமார் சிவில் இன்ஜீனியரிங் முடித்திருக்கிறார். நரேந்திரன் ஹோட்டல் மேனேஜ்மென்ட், அபினாஷ் டிப்ளமோ இன்ஜீனியரிங் படித்துள்ளனர்.
பட்டப்படிப்பு முடித்த இந்த இளைஞர்கள் வேலை கிடைக்காததால், இதுபோன்ற தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததோடு, அந்தப் பணத்தை வைத்து ஜாலியாக ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மூன்று பேரையும் கைது செய்த விராலிமலை போலீஸார் அவர்களிடமிருந்த டூவிலரையும் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/wYJ3By0
via
