பட்டுக்கோட்டை: சொத்துப் பிரச்னையில் அத்தை கொலை... கூகுள் மேப்பால் போலீஸில் சிக்கிய மருமகன்!

0

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் ஏரி பகுதியில் சடலம் ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்.ஐ சந்திரசேகரன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் அந்த இடத்துக்கு விரைந்தது. பின்னர் தாசில்தார் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் தோண்டி எடுத்ததில் முற்றிலும் அழுகிய நிலையில் அடையாளமே தெரியாத அளவிற்கு அந்த உடல் இருந்தது.

கொலை செய்யப்பட்ட அன்னப்பூரணி

இதனால் இறந்தவர் யார், எதற்காக ஏரியில் கொண்டு வந்து புதைத்தனர் எனப் பல கேள்விகளுக்கு விடைத் தெரியாமல் போலீஸார் திணறினர். புதைக்கப்பட்டவர் பெண் என்பதை உடலில் லேசாக இருந்த புடவையை வைத்து கண்டுபிடித்தனர். அத்துடன் யாரோ கொலை செய்து புதைத்திருக்கிறார்கள் என்பதையும் போலீஸார் உறுதிசெய்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் காணாமல் போனது குறித்து எந்த புகாரும் இல்லை என்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து, எஸ்.ஐ சந்திரசேகரன் இறந்தவர் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக திவீர விசாரணை மேற்கொண்டார். எந்த ஆவணங்களும் கிடைக்காத நிலையில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் தகவல் கிடைத்த 15 நாள்களில் சொத்து பிரச்னையில் சொந்த அண்ணன் மகனே தன் அத்தையான அந்தப் பெண்ணை கொலை செய்து புதைத்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்ததுடன், கொலை செய்த இளைஞரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட இடம்

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``உடல் புதைக்கப்பட்ட நிலையில் லேசாக கை மட்டும் வெளியே தெரிகிறது என எங்களுக்குத் தகவல் வந்த உடனேயே சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணையில் இறங்கினோம். கொலை செய்தவன் சின்ன ஆதாரத்தையும் விட்டு வைக்காமல் சாமர்த்தியமாக செயல்பட்டு புதைத்து சென்றதால் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பது சிக்கலாக இருந்தது.

அதையே சவாலாக எடுத்து கொண்டு விசாரணையில் இறங்கினோம். பட்டுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் பெண்கள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா எனக் கேட்டு விசாரித்ததில், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த அன்னப்பூரணி (55) என்பவர் காணாமல் போயிருப்பது தெரிந்தது. மீட்கப்பட்ட சடலம் அவருடையதுதானா என்பதை உறுதி செய்து கொண்டோம். பின்னர் அவருக்கு என்ன பிரச்னை, யாருடனும் விரோதம் இருந்ததா என்பது குறித்தும் விசாரித்தோம்.

கொலை செய்த முருகானந்தம்

அதில், அன்னப்பூரணியை சொத்து பிரச்னையில் அவர் அண்ணன் மகனான முருகானந்தம் (30) என்பவர் கொலை செய்து புதைத்துள்ளார் என்பதை கண்டறிந்தோம். அன்னப்பூரணிக்கு மொத்தம் மூன்று அண்ணன்கள். இரண்டு அண்ணகள் இறந்து விட்டனர். முதல் அண்ணனுக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். இரண்டாவது அண்ணனின் மகன் முருகானந்தம். மூன்றவாது அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவருடன் அன்னப்பூரணி வசித்து வந்தார்.

அன்னப்பூரணிக்கு சொந்தமான திட்டக்குடி பட்டுக்கோட்டை சாலையில் பெரிய இடம் ஒன்று உள்ளது அதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். `உனக்குதான் யாரும் இல்லையே அந்த இடத்தை என் பெயரில் எழுதி வைத்துவிடு' என முருகானந்தம் அன்னப்பூரணியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். அன்னப்பூரணி, தான் மர்மமான முறையில் இறந்தால் அதற்கு முருகானந்தமே காரணம் என ஏற்கெனவே லெட்டர் எழுத்தி வைத்திருந்துள்ளார்.

போலீஸ் எஸ்.ஐ சந்திரசேகரன்

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாட்டுப்பொங்கல் என்பதால் ஊரில் யாரும் இல்லை. அதனால், முருகானந்தம் மதியத்துக்கு மேல் அன்னப்பூரணி வீட்டுக்கு சென்றுள்ளார். சொத்தை தன் பெயருக்கு எழுதி கையெழுத்து போடும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, வீட்டில் இருந்த கல் தூணில் அன்னப்பூரணி தலையை மோதி கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து கொலை செய்திருக்கிறார்.

உடலை போர்வையால் சுற்றி கயிற்றால் கட்டி வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு சென்று விடுகிறார். பின்னர் இரவு பத்து மணிக்கு மேல் ஊர் அடங்கிய பிறகு வந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஒன் சைடாக காலை போட்டு உட்காருவது போல் உடலை வைத்து தன் மார்பின் மீது சாய்த்து கொண்டு ஒத்தை ஆளாக நான்கு கிலோ மீட்டர் தூரத்துல உள்ள சூரப்பள்ளம் ஏரி பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் உடலை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்து கொண்டு சென்றுள்ளார்.

கூகுள் மேப்

ஓரளவிற்கு மேல் அவரால் செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த இடத்திலேயே குழி எடுத்து உடலை உட்கார்ந்த நிலையில் வைத்து புதைத்து விட்டு சென்று விட்டார். கொலை நடந்து 15 நாள்களுக்கு பிறகு கடந்த 31-ம் தேதி ஆழம் அதிகமாக தோண்டாததால் நாய்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி கையை இழுத்ததில் லேசாக உடல் தெரிந்து விஷயம் வெளியே வந்துவிட்டது. உடலை தோண்டி எடுத்தபோது முருகானந்தம் மக்களோடு மக்களாக எங்களுக்கு அருகிலேயே இருந்து நோட்டமிட்டான். அவன் மீது சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவனுக்கு தெரியாமலேயே அவனை கண்காணித்தோம்.

கொலை நடந்த அன்று அவனது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தோம். மேலும் கூகுள் மேப்பை ஆய்வு செய்ததில் அவனுடைய செல்போன் அன்றைய தினத்தில் கூகுள் மேப்பில் அந்த இடத்தில் இருந்ததாக காட்டியது. மேலும், அன்னப்பூரணி எழுதிய லெட்டர், கூகுள் மேப் போன்றவற்றை ஆதாரமாக வைத்து கொலை செய்தவன் முருகானந்தம் என்பதை உறுதி செய்தபிறகு அவனை கைது செய்தோம். விசாரணையில் இதை அவனும் ஒப்புக்கொண்டான். பின்னர் டூவீலர், செல்போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்ததுடன் முருகானந்தத்தை சிறையில் அடைத்துவிட்டோம்" என்றார்கள்.

Also Read: தஞ்சாவூர்: மூன்று பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை! - செல்போன்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/0lkzReC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*