மதுரை அனுப்பானடியிலுள்ள குட்டி குட்டி தெருக்களுக்குள் காரில் வலம் வரும் நடிகர் விஜயை பார்த்து மக்கள் ஆச்சரியத்தில் வாயை பிளக்கிறார்கள். எல்கேஜிகளும், டீன் ஏஜ்களும் காரைப் பின்தொடர்ந்து ஓடி வர முதியவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ரொம்ப கெடுபிடி இல்லாமல் எல்லோரிடமும் செல்பி எடுத்துக் கொள்கிறார் விஜய். திறந்த காரில் கும்பிட்டபடி ஓட்டு கேட்கிறார். சில நேரம் காரை விட்டு இறங்கி வாசலில் நிற்கும் மக்களிடம் துண்டறிக்கை கொடுத்து கும்பிடுகிறார். டீக்கடையில் டீ ஆற்றினார். வடை சுட்டார். வழக்கமாக துள்ளல் நடையுடன் வந்து மீண்டும் வாக்கு சேகரிக்கிறார்.
மாஸ்டர் படக் காட்சி போல சாலையில் வேகமாக ஓடி வந்து டவுன் பஸ்ஸில் ஏறி பயணிகளை ஆச்சரியப்படுத்துகிறார். அப்படியே அவர்களிடம் வாக்கு கேட்கிறார். பின்பு சைக்கிளில் வருகிறார். `தளபதி! தளபதி!' என்று கோஷமிட்டபடி ரசிகர்கள் பின்னாலயே ஓடி வருகிறார்கள்.
"ஓட்டு கேட்டு நம்ம தெருவுக்கு நடிகர் விசய் வந்திருக்காக..." என்று பரவிய தகவலால் சுற்றியுள்ள தெருக்களை சேர்ந்த ஆண்களும் பெண்களும் இந்த வார்டுக்கு திரண்டு வந்து விட்டார்கள்.
"சினிமாவுல வர்ற மாதிரியே ஸ்டைலா இருக்காப்ல...'' என்று ஏரியா சிறுசுகள் வாயைப் பிளக்க, "கவுன்சிலருக்கு ஓட்டு கேட்டு வர்ற அளவுக்கு முழுசா அரசியலுக்கு வந்துட்டாப்லயா" என்று டீக்கடையில் உட்காந்திருந்த நடுத்தர ஆட்கள் அரசியலை ஆழமாக அலச ஆரம்பித்தனர்.
பின்னே, இளைய தளபதி விஜய், நேரில் வந்து தன்னுடைய இயக்க வேட்பாளருக்கு ஓட்டு கேட்டால் மக்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படாதா?
கடந்த 16-ம் தேதி விஜய் போன்ற கெட்ட்ப்பில் வந்த பாலக்காடு ராஜேஷின் வருகையால் மதுரை அனுப்பானடி பகுதியே பரபரப்பானது. அங்கு 88-வது வார்டில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் நாகேஸ்வரிக்கு வாக்கு சேகரிக்க அச்சு அசலாக மாஸ்டர் பட விஜய் போலவே இருக்கும் ராஜேஷை அழைத்து வந்திருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக கட்சித் தலைவர்கள் வரிசையாக வருகை தந்து பிரசாரம் பண்ணி செல்கிறார்கள்.
அவர்களின் பிரசாரத்தை மறக்க செய்யும் வகையில் பரபரப்பை கிளப்பியுள்ளது இந்த நகல் விஜய்யின் பிரசாரம்.! இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
"இந்த ஐடியா எப்படி வந்தது?" என்று அங்கிருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கேட்டேன். " நாங்கள் அரசியலில் அகலக்கால் வைக்காமல் அமைதியாக தடம் பதித்து வர்றோம். அதனால்தான் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஆட்களை நிறுத்தாமல் குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டும் நிறுத்தியுள்ளோம். அதில் முக்கியமானது இந்த வார்டு. எங்கள் மகளிர் அணி நிர்வாகிதான் போட்டியிடுகிறார். எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதி இது. மற்ற கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கத் திட்டமிடுகிறார்கள். நாங்கள் மக்களுக்கு பாடுபடப்போவதையும் தளபதியின் கொள்கைகளையும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். ஏற்கனவே வேட்பு மனு தாக்கலின்போது எங்கள் மன்ற உறுப்பினர் குரு, மெர்சல் பட விஜய் கெட்டப்பில் வந்து எல்லோரையும் திரும்பி பார்க்க வச்சார். மக்கள் மத்தியில் அது ரொம்ப ரீச்சானாச்சு.
அதனால மக்களை ஈர்க்க இன்னும் என்ன செய்யலாம்னு யோசிச்சபோதுதான் பாலக்காட்டை சேர்ந்த ராஜேஷ் விஜய் போலவே இருப்பதாகவும் அவர் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகவும் கேள்விப்பட்டு அவரை இங்கு அழைத்து வந்தோம். ரசிகர்களான நாங்க பார்த்தாலும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியல. அப்படியே அச்சு அசலா எங்க தளபதி மாதிரியே இருக்கார். அதிலும் `மாஸ்டர்' பட கெட்டப்புல வரும்போது உண்மையான விஜய்தான் வர்றார்னு ஜனங்க நம்புற அளவுக்கு அவர் உருவம், பாடி லாங்வேஜ் இரண்டும் அப்படியே அமைஞ்சிருக்கு. அவரை அழைச்சிட்டு வந்தது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கு. இதனோட வெற்றி தேர்தல் ரிசல்ட்டுல தெரியும். இந்த தடவை மதுரை மாநகராட்சியில் கணக்கை தொடங்குவோம்" எனத் தன்னம்பிக்கையாகப் பேசினர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/PXIihGr
via
