தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அரசு அதிகாரிகள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
வழக்கமாகத் தேர்தல் பணிகளின் போது அதிகாரிகள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என ஒவ்வொரு தரப்புக்கும் தனித் தனியாக உணவு ஏற்பாடு செய்யப்படும். அதே போல் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து உணவு தயார் செய்து பொட்டலம் போட்டுக் கொடுப்பார்கள். அதனால், உணவும் தரமில்லாமல் இருக்கும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் விழாக்களுக்குச் சமைப்பது போல் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சமைத்து `சூடாக பஃபேட்' சிஸ்டம் முறையில் அனைவருக்கும் ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் சாப்பிட்ட இடத்திலேயே மாநகராட்சி ஆணையரும் சாப்பிட்டார். அத்துடன் காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒரே இடத்தில் சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாட்டைச் செய்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரைப் பலரும் பாராட்டினர்.
இது குறித்துப் பேசிய தூய்மைப் பணியாளர் ஒருவர், ``அரசு முக்கிய நிகழ்வுகள் ஏதுவாக இருந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளப்பட மாட்டோம். அத்துடன் சாப்பாடு உள்ளிட்ட அனைத்தும் எங்களுக்கென தனியாகக் கொடுப்பார்கள்.
ஆனால், இந்த முறை அரசு அதிகாரிகள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் சமமாக நடத்தப்பட்டு எல்லோருக்கு மத்தியிலும் நின்று சாப்பிட்டோம். எங்களுக்கு அருகிலேயே ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சாப்பிட்டனர். இந்த ஏற்பாட்டினை செய்த ஆணையர் சரவணகுமார் செயல் மூலம் நாங்கள் பெருமிதம் அடைந்து நெகிழ்ந்தோம்" எனத் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/D3ohJzZ
via
