புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 வார்டுகளையும், திமுக 5 வார்டு, காங்கிரஸ் 1வார்டு என திமுக கூட்டணி 6 வார்டுகளையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தையும் பிடித்தனர். சுயேச்சையாக வெற்றி பெற்ற வேட்பாளர் அதிமுக ஆதரவு நிலையிலிருந்ததால், அதிமுக உறுப்பினர்களின் பலம் 9 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் தான், அதிமுக பேரூராட்சித் தலைவர் பதவியை எளிதாக கைபற்றும் வாய்ப்பு அமைந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் பேரூராட்சியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால், பரபரப்பு மிகுந்த பேரூராட்சியாக அன்னவாசல் பார்க்கப்பட்டது. குறிப்பாக, "திமுகவினரால் பாதுகாப்பற்ற சூழலுக்கு வாய்ப்பிருக்கிறது. மறைமுகத் தேர்தலில் நாங்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் போதிய பாதுகாப்பை உறுதி செய்து தர வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிமுக உறுப்பினர்கள் மனு செய்திருந்தனர். இந்த நிலையில் தான், உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே தான் மறைமுகத் தேர்தலின் போது, பேரூராட்சி அலுவலகத்தைச் சுற்றிலும் அதிமுகவினரும், திமுகவினர் மற்றும் திமுகவினர் திரண்டனர். அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மாள் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமயில் திரண்ட திமுகவினர், அதிகாலையிலேயே ஏன் பேரூராட்சி அலுவலகத்திற்குள் அதிமுக உறுப்பினர்கள் சென்றார்கள், போலீஸ் அதிமுக-வுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுகவினர் பலரும் தடுப்பு வேலிகளைத் தாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது, போலீஸாருக்கும், திமுகவினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, திமுகவினர் கல் எடுத்து வீச, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தடியடி சம்பவத்தால், திமுக தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போலீஸாரிடம் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் உட்பட திமுகவினர் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், "எப்படி அதிகாலையிலேயே அலுவலகத்திற்குள்ள போனாங்க. நீங்க எல்லாம் என்ன ____ வேலை பார்க்கிறீங்களா"ன்னு போலீஸாரைக் கடுமையான வசைபாடினார். தொடர்ந்து, அங்கு வந்த மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபனிடம்,
"நீங்க ஃபயர் வேணும்னாலும் பண்ணுங்க. நாங்க கவலைப்படப்போறதில்லை. இங்க பாதுகாப்புப் பணியில இருக்க இந்த போலீஸ்காரரு, காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவாரு. அலுவலகத்துக்குள்ள இருக்க அதிமுகவினர்ல 4 பேர் எனக்கிட்ட காசு வாங்கியிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் 25 லட்சம்னு 4 பேரும் 1 கோடி ரூபாய் என் கையால கொடுத்திருக்கேன். திமுகவுக்கு வாக்களிக்கிறாங்களான்னு எப்படி தெரியும்" என்று வெளிப்படையாகவே பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதோடு, ``நாளைக்கு காலையில சி.எம் அப்பாயின்மெண்ட், அப்போ நான் உன்னைய பார்த்துக்கிறேன்”னு சொல்லி அங்கிருந்த போலீஸ் ஒருவரை மிரட்டுகிறார். இதற்கிடையே, மாவட்ட எஸ்.பி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனிடம், `கொஞ்சம் பொறுமையா, ஒத்துழைப்பு கொடுங்க சார்’ன்னு சொல்வதுடன், கையெடுத்து கும்பிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே இன்னும் சில திமுகவினர், முதல்வர் கொடுக்கிற சலுகையால தான் இந்த ........போலீஸ்காரங்க ஆடுறாய்ங்கன்னு தகாத வார்த்தைகளில் பேசியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். கலவரம் குறித்து காவல்துறைத் தலைமை, மாவட்ட காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருக்கிறது. அதனடிப்படையில், திமுக நிர்வாகிகள் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, திமுக கட்சித் தலைமையிலிருந்து திமுகவினர் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/1eiNhDa
via
