ஒரு ஒன்றியம்; இரண்டு மாவட்டம்; 50 வருடப் போராட்டத்துக்கு தீர்வே கிடையாதா? -தவிக்கும் 12 ஊராட்சிகள்

0

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்) சங்கரன்கோவில் தாலுகாவில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், கழுகுமலை குறுவட்டத்திற்கு உட்பட்ட ஜமீன்தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகளையும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திட வேண்டும் என, 12 ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. `இந்த 12 ஊராட்சிகளும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் அடங்கும்’ என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களின் ஒருமித்த கருத்துருவின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு, கடந்த 20.03.2008-ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இளையரசனேந்தல்

பின்னர், 15.04.2008-ல் இளையரசனேந்தலை தலைமையாகக் கொண்டு 12 ஊராட்சிகளை உள்ளடக்கி குறுவட்டமாக அறிவித்து கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், உள்ளாட்சி அமைப்பு ரீதியாக தற்போதுவரை தென்காசி மாவட்டத்திலுள்ள குருவிகுளம் யூனியனில்தான் 12 ஊராட்சிகளும் உள்ளன. இதனால், தமிழக அரசின் திட்டங்களைப் பெறுவதில் காலதாமதமும், அலைக்கழிப்பும் ஏற்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், யூனியன் பிரச்னையால் மத்திய அரசின் எந்தவொரு திட்டமும் எங்களுக்குக் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் கிராம மக்கள். இந்த நிலையில், இந்த 12 ஊராட்சிகளையும் தென்காசி மாவட்டத்திற்குள் இணைத்திட வேண்டும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அரசுக்கு கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்பட்டது. இத்தகவல் சமூக வலைதளங்களிலும் வைரலானது. கீதாஜீவனுக்கு எதிராக 12 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் கண்டனம் தெரிவித்தனர். ’அமைச்சர் கீதாஜீவன் பதவி விலக வேண்டும்’ என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 12 ஊராட்சிகளின் தலைவர்கள், 12 ஊராட்சிகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனக் கையெழுத்திட்டு கூட்டாக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

செந்தில்ராஜ் - ஜெயபிரகாஷ் நாராயணசாமி

அத்துடன், கீதாஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட சில அமைச்சர்களையும், தூத்துக்குடி எம்.பி கனிமொழியைச் சந்தித்தும் மனு அளித்தனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தவரும் ஜமீன்தேவர்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரரான ஜெயபிரகாஷ் நாராயணசாமியிடம் பேசினோம், ”இந்த 12 ஊராட்சிகளில் 11,670 ஹெக்டேர் நிலப்பரப்பும், 17 பாசனக் குளங்களும் இருக்கு. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்வசிச்சிட்டு வர்றோம். நிலவியல் ரீதியாவும் கல்வி, வேலைவாய்ப்பு, விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், மருத்துவம், போக்குவரத்து என எல்லாவற்றுக்கும் கோவில்பட்டியைத்தான் சார்ந்திருக்கோம்.

இந்த 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைத்திடக்கோரி, கடந்த 2007-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ரிட் மனு தாக்கல் செஞ்சேன். மனு மீதான விசாரணையில் விரைவாக நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மதுரைக்கிளை உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்பிறகே, 2008-ல் 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டது. வருவாய்த்துறை மட்டும்தான் மாறியதே தவிர மற்ற எந்த துறைகளும் மாற்றப்படவில்லை. 2011-ல் மீண்டும் மதுரைக்கிளையில் ரிட் மனு தாக்கல் செய்த பிறகே கல்வி, போக்குவரத்து, நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளும் மாற்றப்பட்டது. அதிலும், உள்ளாட்சி அமைப்பு மட்டும் மாற்றப்படவில்லை. கடந்த 2009-ல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அரசுக்கு அளித்த ஒருமித்த கருத்துரு அறிக்கை அளித்ததை 2014-ல் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் நினைவுபடுத்தினோம்.

ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

12 ஊராட்சிகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைத்திட நீதிமன்றம் உத்தரவிட்டும் இணைக்கப்படவில்லை. 2017-ல் சங்கரலிங்கம் (ஐந்தாம் தூண் அமைப்பின் நிறுவனர்) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீதும், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக, ’12 ஊராட்சிகளில் 9 ஊராட்சிகள் கோவில்பட்டி தாலுகாவில் இணைய விரும்பவில்லை’ என ஒரு பொய்யான அறிக்கையை உள்ளாட்சித்துறை அளித்தது.

உடனே, ’இது பொய்யான அறிக்கை. 9 ஊராட்சிகளிலும் அப்படி எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை’ என தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்ல. ’உள்ளாட்சித் தேர்தலை அந்தந்த ஊராட்சிகளுக்கான வருவாய் மாவட்டத்திற்குள்தான் நடத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலையில், போன வருஷம் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புகூட, ’கோவில்பட்டி யூனியனிற்குள் இணைக்கப்பட்ட பிறகுதான் இந்த 12 ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்’ என வழக்கு தொடர்ந்தேன். ஆனால், ’12 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடித்துவிட்டோம்’ என, கலெக்டரும் கோவில்பட்டி யூனியன் கமிஷனரும் அறிக்கை அனுப்பியிருப்பதாக நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - தென்காசி

ஆனால், அந்த 12 ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. அவர்கள் சொன்னதுபடி தேர்தல் நடத்தியிருந்தால் ஏன் மீண்டும் தேர்தல் நடத்தணும்? இந்த 12 ஊராட்சிகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பரிந்துரைக்கடிதம் அனுப்பியிருக்கார். இந்த 12 கிராமங்கள்ல இருந்து கோவில்பட்டிக்கு வரணும்னா அதிகபட்சமா 15 கி.மீ தூரம்தான். ஆனா, குருவிகுளத்துக்கு 41 கி.மீ தூரமும் தென்காசிக்கு 90 கி.மீ தூரமும் போகணும்.

பொதுமக்கள், விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திட்டோம். எந்த பிரயோசனமும் இல்ல. தி.மு.க ஆட்சியில்தான் நெல்லை மாவட்டத்தில் இருந்து இந்த 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இப்போ அதே தி.மு.க ஆட்சியில திரும்பவும் இங்க இருந்து தென்காசி மாவட்டத்துல இணைக்கப் போறோம்னு சொன்னா எப்படி? எங்களோட 50 வருசப் போரட்டத்துக்கு தீர்வே கிடையாதா? ” என்றார். ”12 ஊராட்சிகள் பிரச்னையில் எனக்கு தனிப்பட்ட நலன்கள் எதுவும் கிடையாது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்திட உறுதுணையாக இருப்பேன்” என்கிறது அமைச்சர் கீதாஜீவன் தரப்பு.

கீதாஜீவனிடம் மனு அளித்த 12 ஊராட்சி மன்றத் தலைவர்கள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜிடம் பேசினோம், ”இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திட வேண்டும் என அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரைக்கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. பரிந்துரையை அரசும் ஏற்றுக் கொண்டது. உள்ளாட்சி அமைப்பு ரீதியாக அந்த கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். மக்களுக்கான அரசு, மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/qN3kEBl
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*