புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தத்ரூபமான, நுண்ணிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள் ஆச்சர்யம் அளிப்பவை. குடைவரைக்கோயிலுடன், அதன் அருகே உள்ள கர்னாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்ந்த இசைக் கல்வெட்டு இந்தியாவிலேயே குடுமியான்மலையில் மட்டும்தான் இருக்கிறது. குடுமியான்மலை முழுவதும் மொத்தமாக 120 கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.
புகழ்பெற்ற குடுமியான்மலைக் கோயிலில் முன்னொரு காலத்தில் சிறப்பாக நடைபெற்று வந்த தேர்த்திருவிழாவானது, பழைய தேர் பழுதாகிவிட்டதால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் போனது. இந்த நிலையில்தான் புதிய தேர் செய்து மீண்டும் தேரோட்டம் நடத்தப் பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக பக்தர்கள் சார்பில் நன்கொடைகள் அளிக்கப்பட்டன. அரசு மற்றும் பக்தர்கள் அளித்த நன்கொடைகள் மூலம் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்றுவந்த புதிய தேர் செய்யும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் இந்த வருடம் திருவிழா நடத்த அப்பகுதியினர் முடிவு செய்தனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த நிலையில்தான் விழாவின் முக்கிய நிகழ்வாகத் தேரோட்டம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோரைத் தேரில் எழுந்தருளச் செய்தனர். கிட்டத்தட்ட 60 வருடங்களுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால், குடுமியான்மலை மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் குடுமியான்மலையின் முக்கிய வீதிகளில் வலம் வர, பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதன் பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/b7vxCgi
via
