``கொஞ்சநாள் முன்னவரைக்கும் அந்தக் கவலை இருந்துச்சு, இப்போ இல்ல!'' - பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மா

0

புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தவர் முத்துக்கண்ணம்மா. இன்று தேவதாசி மரபின் கடைசி வாரிசாக எஞ்சி நிற்கும் அவருக்கு வயது 83. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்விகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாவுக்குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், சதிராட்டக் கலைஞரான முத்துக்கண்ணம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று திரும்பிய முத்துக்கண்ணம்மாவுக்கு, விராலிமலை மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினர்.

விருது பெறும் முத்துக்கண்ணம்மா

விராலிமலை முருகன் கோயிலின் அடிவாரத்திலிருந்து, வீடு வரையிலும் மேல தாளம் முழங்க, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், காரில் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று நெகிழவைத்தனர்.

விருதை பெற்ற உற்சாகத்தில் இருந்த முத்துக்கண்ணம்மாவிடம் பேசினோம். ``விருது வாங்குறதுக்கு நான், என் மகள் ரெண்டு பேரும்தான் போயிருந்தோம். இதுவரைக்கும் விமானத்தை பார்த்ததுகூட இல்லை. விமானத்துல போயி விருது வாங்கினது, வானத்துல றெக்கை கட்டி பறந்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

அங்க போனதும், பிரதமர்ல இருந்து குடியரசுத் தலைவர் வரைக்கும் எல்லாரையும் சந்திச்சேன். குடியரசுத் தலைவர் கையால வாங்கின இந்த விருது கிடைக்கத்தக்க ஒண்ணு. இத்தனை வயசுலயும் எனக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்கு சதிர் கலைதான் காரணம். கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், எனக்கு அப்புறம் இந்தக் கலை அடுத்த தலைமுறைக்குத் தெரியாம போயிடுமோன்னு கவலை இருந்துச்சு. ஆனா, இப்போ எனக்கு அந்தக் கவலை இல்லை. எனக்குக் கிடைச்ச விருது மூலமா, இப்போ இது பற்றி பலருக்கும் தெரியவந்திருக்கு, கண்டிப்பா சதிர் கலை அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும் என்ற நம்பிக்கை வந்திருக்கு" என்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் பாராட்டு

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், ``விராலிமலையின் பெயரையும், தமிழ்நாட்டின் அடையாளத்தையும் இந்திய அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் முத்துக்கண்ணம்மாவின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலை வழங்கி, முத்துக்கண்ணம்மாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3G7BuFW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*