கொடைக்கானல் பெருமாள்மலையில் திடீர் தீ விபத்து! - தீயை அணைக்க போராட்டம்

0

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். ’மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் இம்மலைப் பகுதியில், ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருவதால்தான் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் அரிய வகை மரங்கள், சுமார் 100 ஆண்டுகள் ஆன பழமையான மரங்களும் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய அதிக வெயில் அடிக்கும் மாதங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால், வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது.

புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும் மலை

அரிய வகை மரங்கள் உள்ள இப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ, மெல்ல மெல்லப் பரவி குடியிருப்பு பகுதிகள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் பரவி வருகிறது. இந்த நிலையில், பெருமாள் மலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீ, தற்போது வரையிலும் தொடர்ந்து வருகிறது. இதனால், பல அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகி வருகின்றன. இதனால், அப்பகுதி கடுமையானப் புகை மண்டமலாக மாறி வருகிறது.

100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தீ வேகமாகப் பரவி வருவதாலும், அதிகப்படியான புகையினாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக தீயணைப்புத்துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, காட்டுத்தீக்குப் பயந்து காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, மலைப்பாம்பு போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளதாக மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடாமல் இருக்க ஊர் மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகை சூழ்ந்த பெருமாள்மலை

அதே நேரத்தில் ஊருக்குள் புகுந்துவிட்டாலும் அதனை விரட்டிடவும் தயார் நிலையில் உள்ளனர். தீ பரவல், புகை மண்டலத்தினால் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேற்குதொடர்ச்சி மலையிலும் இதே போன்று தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அதிக வெயில் நிலவும் காலங்களில் மரங்களைப் பாதுகாத்திட, வனத்துறை அதிகாரிகள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/logKzpW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*