முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். ஏற்கெனவே கடந்தாண்டு வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்திய நிலையில், நேற்று புதிததாக வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் சுமார் 13 மணி நேரத்துக்கும் மேல் ரெய்டு நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு ஆதரவு தெரிவித்தனர். ரெய்டு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வேலுமணி கூறுகையில், “இரண்டாவது முறையாக மீண்டும் என் மீதும், என் சகோதரர், எனக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளனர். திமுகவையும், முதல்வரையும் யார் எதிர்த்து தேர்தல் வேலை பார்த்தார்களோ, அரசியல் செய்தார்களோ அங்குதான் ரெய்டு நடத்துகின்றனர். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தான் ரெய்டு நடத்தினர்.
கடந்த முறையும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்தமுறையும் என் வீட்டில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. சட்டசபை தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் கடுமையாக வேலை பார்த்தோம்.
முறைகேடு செய்துதான் இங்கு திமுக வெற்றி பெற்றது. சிபிஐயிடம் இந்த விஷயத்தை ஒப்படைத்தாலே உண்மை தெரிந்துவிடும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் கொரோனா நோயாளிகளுக்கு மாலை 5-6 மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கோவையில் மொத்தமே 70 கொரோனா நோயாளிகள் தான் உள்ளனர்.
ஆனால் 85,000 பேர் வாக்கு செலுத்தியதாக கணக்கு காண்பிக்கின்றனர். வாக்கு இயந்திரத்திலேயே முறைகேடு செய்துள்ளனர். அமைச்சராக இருக்கும்போது அதிகாரிகளுடன் அலுவல் ரீதியாக வெளிநாடு சென்றேன்.
அதேபோல மருத்துவ காரணங்களுக்காகவும், உறவினர்களை பார்க்க வெளிநாடு சென்றதை எல்லாம் இப்போது தவறாக கூறுகின்றனர். என் வீட்டில் இருந்து எந்தப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. என்னுடன் வாக்கிங் வந்தவர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசும்போது, ‘நான் எல்லோருக்கும் பொதுவானவன்.’ என்று சொல்கிறார். ஆனால், முழுமையாக பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே அவர் ஈடுபடுகிறார். தேர்தல் வாக்குறுதி உள்பட எதையுமே நிறைவேற்றவில்லை.” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/IEvT5RN
via
