தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் வழி சான்று அவசியமா? டிஎன்பிஎஸ்சி உத்தரவால் சர்ச்சை!

0

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும்போது தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றுடன் அனுப்புவது அவசியம் என அறிவித்துள்ளது.

ஆனால், தமிழின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கும் தமிழ் வழி சான்று அவசியம் எனக் கூறுவது வேதனைக்குரியது. அதற்கான சான்றைக் கொடுப்பதற்கு தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.1,000 வசூலிப்பது அதைவிட அபத்தமாக உள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண வேண்டும்" எனத் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படுகிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ-விற்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில் தமிழக அரசு தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு இருபது சதவிகித இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. விண்ணப்பம் அனுப்புபவர்கள் தமிழ் வழி கல்வி கற்றதற்கான சான்றுடன் அனுப்ப வேண்டும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

"தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அதற்கான சான்றை பெற்ற பிறகே விண்ணப்பங்கள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கும் இந்தச் சான்று அவசியம் என டிஎன்பிஎஸ்சி கூறுவதை ஏற்க முடியவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களிடமும் டிஎன்பிஎஸ்சி தமிழ் வழிக்கான சான்றை கேட்பது கேலி கூத்தாக உள்ளது" என அதில் படித்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இது குறித்து தமிழ் வழி கல்வி இயக்கத்தின் இணை செயலாளர் வெங்கடேசன் என்பவர் நம்மிடம், "தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தமிழின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் அதன் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தமிழ் வழியில் அனைத்து பாடங்களையும் அதிகாரப்பூர்வமாக நடத்தி வருவதும் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றுதான். இந்தச் சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்புவர்கள் தாங்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுடன் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அரசு, தமிழ் வழியில் படித்தவர்களுக்காக இருபது சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கியுள்ளது வரவேற்கக் கூடியது. அதற்காக இந்தச் சான்றும் கேட்கப்படுகிறது. இதில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வழியில் படித்தவர்கள் சான்றினை பெற்றே விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களிடமும் இந்த சான்றை ஏன் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகம்

இது ஒருபுறம் இருக்க, தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகம் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் தருவதற்கு ஒவ்வொரு நபரிடம் ரூ.1,000 பணம் பெற்று கொண்டே தருகின்றனர். நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் ரூ.1,000 பணம் செலுத்தி தாங்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் என சான்றிதழ் பெற்று டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இந்த நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பலர் ரூ.1,000 செலுத்தி சான்றிதழ் பெற முடியாத நிலையில் உள்ளது.

ஒன்று, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதனைக் கவனத்தில் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்க கட்டணம் எதுவும் வாங்காமல் இலவசமாக வழங்கிட உத்தரவிட வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து தமிழ் இலக்கிய வரலாறு பட்டம் பெற்றவர்களிடமும் தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்று வேண்டும் என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். அரசு உடனடியாக இதில் தலையிட்டு இந்த நடைமுறையில் உள்ள குறைகளைக் களைய வேண்டும். குறைந்தபட்சம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு தமிழ் வழி கல்விக்கான சான்றிதழ் அவசியமில்லை என்றாவது உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளுவனிடம் பேசினோம். "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரசு அறிவுறுத்தலின் படி தமிழ் வழி கல்விக்கான சான்று தருவதற்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பெறப்படுகிறது. இங்கு படித்தவர்களுக்கு அந்தச் சான்று அவசியமில்லை என்கின்றனர். அவர்களது கோரிக்கை நியாமானது. அரசு சான்று தருவதற்கு ரூ.1,000 வசூலிக்க கூடாது என ஆணை பிறப்பித்தால் கட்டணம் வசூலிப்பது உடனே நிறுத்தப்படும்" என்றார்.

தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமா?



from மாவட்ட செய்திகள் https://ift.tt/a8TRb7e
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*