திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள பத்தியாவரம் கிராமம் சூசை நகரில், அரசு நிதியுதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வளாகத்தில் சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் மாணவர்களுக்கான விடுதி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த விடுதியில் 112 மாணவர்கள் தங்கி, அந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். விடுதி வார்டனாக தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரத்தைச் சேர்ந்த 37 வயதாகும் துரைபாண்டியன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். துரைபாண்டியனுக்குத் திருமணமாகி மனைவி, 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பலரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகமானதால், அச்சமடைந்த மாணவர்கள் ‘1098’ என்ற சைல்டு லைன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகாரளித்துள்ளனர். இது குறித்து, தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உரிய விசாரணை நடத்தும்படி எஸ்.பி பவன்குமாருக்கு உத்தரவிட்டார். அவர் உத்தரவின்பேரில், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு சென்று வார்டன் துரைபாண்டியனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வார்டன் துரைபாண்டியனை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/MSVvIAr
via
