`தமிழ்நாட்டில் எங்கும் இப்படி ஒரு திருவிழா இல்லை' - கவனம் ஈர்த்த வலங்கைமான் பாடைக்கட்டித் திருவிழா!

0

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பாடைக்கட்டித் திருவிழா தனித்துவம் மிக்கது. இந்த ஆண்டு நடைபெற்ற இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டார்கள். ஏராளமான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவை முன்னிட்டு, மகா மாரியம்மன்னுக்குப் பால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

பாடைக்கட்டித் திருவிழா!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் பலநூறு ஆண்டுகள் பழைமை மிக்கது. இக்கோயில் தமிழக அளவில் பிரசித்துப் பெற்றது. இக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறக்கூடிய பாடைக்கட்டித் திருவிழா, வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து குணமடைய, மகா மாரியம்மனிடம் முறையிட்டு, இப்பிரச்னையில் இருந்து விடுபட்டால், பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்வார்கள்.

அந்த பாதிப்பிலிருந்து, குணமானவுடன், இதிருவிழாவின்போது பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இவ்வாறு நேர்த்திடன் செலுத்துபவர்கள், பாடைக்காவடி மீது படுத்துக் கொண்டு, பிணம் போல் அசைவற்றுக் கிடப்பார்கள்.

இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளும் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பாடைக்காவடியை 4 பேர் தூக்கிக்கொண்டு வந்து, மகா மாரியம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வருவார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற இவ்விழாவில் பாடை மீது படுத்து ஏராளமான பக்தர்கள் கோயிலைச் சுற்றி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பாடைக்காவடி மட்டுமல்லாது, பறவைக்காவடி, பால்குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி மகா மாரியம்மனை வழிபட்டனர். வெள்ளி அன்ன வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் கூடிய மகாமாரியம்மனின் வீதி உலா நடைபெற்றது. இத்திருவிழாவின் மேலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, வலங்கைமான் அருகே உள்ள விசலூர் கிராமத்தில் இருந்து கரகப் புறப்பாடுடன் செம்மறி ஆடு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, இக்கோயிலின் எதிர்புறம் உள்ள செடில் மரத்தில் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற பாடைக்கட்டித் திருவிழாவில், வலங்கைமான் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/mb7d6wN
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*