வேறுபெண்ணுடன் தொடர்பு; கண்டித்த காதல் மனைவி கொன்று புதைப்பு! - இரண்டு மாதங்களாக நாடகமாடிய கணவன் கைது

0

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகேயுள்ள வடுகந்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் என்ற விநாயகம். இவரும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 24 வயது மகள் சுப்ரஜா என்பவரும், வேலூரில் இருக்கும் தனியார் ஐ.டி.ஐ-யில் ஒன்றாகப் படித்த போதிலிருந்தே காதலித்துள்ளனர். மகளின் காதல் விவகாரம் தெரியவந்தவுடன், பெற்றோர் ஆரம்பத்திலேயே கண்டித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பைமீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய சுப்ரஜா காதலன் விநாயகத்தை மணமுடித்தார். இருவரும் கே.வி.குப்பம் அருகேயுள்ள முடினாம்பட்டு கிராமத்தில், வாடகைக்கு வீடு எடுத்து இல்லற வாழ்ககையைத் தொடங்கினர்.

விநாயகம்

குழந்தைப் பிறந்து 2 வயது ஆன நிலையில், விநாயகத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சுப்ரஜா கணவனிடம் சண்டைப் போட்டுள்ளார். தகராறு நீடிக்கவே, ஜனவரி 19-ம் தேதியிலிருந்து சுப்ரஜாவை திடீரென காணவில்லை. அவர் எங்கேயோ சென்றுவிட்டதாகக் கூறி கடந்த 2 மாதங்களாக காதல் கணவன் விநாயகம் நாடகமாடி வந்துள்ளார். சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி வீட்டிற்குச் சென்று சுப்ரஜாவைப் பற்றி கேட்கும் போதெல்லாம் விநாயகம் மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் சுப்ரஜாவைக் கண்டுபிடித்துத் தரக்கோரியும், அவர் மாயமான விவகாரத்தில் அவரின் கணவன் மீதே சந்தேகம் இருப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, கணவன் விநாயகம், அவரின் தம்பி விஜய் மற்றும் உறவினரான 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது காதல் மனைவி சுப்ரஜாவைக் கொன்று, அருகிலுள்ள சர்க்கார் தோப்பில் புதைத்துவிட்டதாகக் கூறி விநாயகம் அதிர வைத்துள்ளார்.

சுப்ரஜா

விநாயகம் சொன்ன இடத்துக்கு நேற்று மாலை போலீஸார் சென்று, தோண்டி பார்த்தனர். அப்போது, அழுகிய நிலையில் சுப்ரஜாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கணவன் விநாயகம், அவரின் தம்பி விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீஸார், காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கொலையில் தொடர்புடைய மூன்றாவது குற்றவாளியான 18 வயது சிறுவனை மட்டும் செங்கல்பட்டில் உள்ள சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம், கே.வி.குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/tzay8pV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*