நெல்லை: பிரபல ரௌடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! - நடந்தது என்ன?

0

தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர், முருகன். இவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கிய பின்னர் தனது பெயரை நீராவி முருகன் என வைத்துக் கொண்டார். இவர் மீது தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர் இன்று என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் நீராவி முருகன் முதல் குற்றவாளியாக இருந்தார். இது தவிர, பல கொலை கொள்ளை வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதால் பல மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் அவரைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், ஒட்டஞ்சத்திரம் அருகே அண்மையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அதனால் அவரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட போலீஸார் தீவிரம் காட்டினார்கள். அத்துடன் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.

நீராவி முருகன்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படையினருக்கு தகவல் கிடைத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையிலான தனிப்படையினர் இன்று நெல்லை வந்துள்ளனர். நாங்குநேரிக்கு அவர்கள் சென்றபோது நீராவி முருகன் அங்கிருந்து களக்காடு சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது., அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீஸாரை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளார். மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்கவுன்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்த அவரின் உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது.

நீராவி முருகன் கதை!

தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்த முருகனுக்கு சங்கர் என்ற ரௌடியுடன் பழக்கம் ஏற்படும் வரையிலும் குடும்பத்துடன் சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். சங்கருடனான பழக்கத்துக்குப் பின்னர், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 1998-ல் தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே செல்வராஜ் என்பவரை, கொள்ளையடித்த நகையைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தார்.

என்கவுண்டர் செய்யப்பட்ட நீராவி முருகன்

முன்னாள் அமைச்சரான ஆலடி அருணா கொலையில் கூலிப்படையாக மாறினான். இதனால் காவல்துறையினர், நீராவி முருகனை இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைக்குள் நீராவி முருகனுக்கு ரௌடிகள், தாதாக்கள் என பலருடைய நட்பு கிடைத்தது. நகைகளை வழிப்பறி செய்வதில் நீராவி முருகனுக்கென்று தனி ஸ்டைல் இருந்துள்ளதாக காவல்துறையினர் சொல்கின்றனர்.

யாரிடம் வழிப்பறி செய்தாலும் தன்னந்தனியே துணிச்சலாக களத்தில் இறங்கி நகை, பணத்தை சர்வசாதாரணமாக பிடுங்கி செல்வது நீராவி முருகனின் ஸ்டைல். ஆனால் வழிப்பறியில் ஈடுபடுவதற்கு முன்பே தப்பி செல்ல திட்டங்கள் தீட்டுவது, ஆதாரங்களை காவல்துறைக்கு கிடைக்காத வகையில் செயல்படுவது என்று முன்னெச்சரிக்கையாகவே வழிப்பறியில் ஈடுபடுவார்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நீராவி முருகன் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கைவரிசையை காட்டத் தொடங்கினார். கொலை, கொள்ளை என அவரது ஆட்டம் அதிகரிக்கவைக்கத் தொடங்கியதால் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸாரால் நெல்லை மாவட்டத்தில் களக்காடு அருகே என்கவுன்டர் செய்யப்பட்டார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Oc94qzm
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*