கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் கான்பியர்(47). இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கடந்த 3 மாதங்கள் முன்பு வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளார். இவருக்கு வனஜா(32) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஜோஸ் கான்பியரின் மகள் ஒருவர் கழுத்தில் ரத்த காயத்துடன் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம், 'என் அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துவிட்டார்' என கூறியிருக்கிறார். இதனால் அப்பகுதியினர் உடனடியாக கோட்டாறு காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பெட்ரூமில் கட்டிலுக்கு அடியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வனஜா இறந்துகிடந்தார். ஜோஸ் கான்பியர் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார். மற்றொரு மகள் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கிடந்தார்.
சிறுமியை மீட்ட போலீஸார், கழுத்தில் காயத்துடன் இருந்த மற்றொரு சிறுமியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோஸ் கான்பியர், வனஜா உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீஸார் கூறுகையில், "வனஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, முதல் கணவனை பிரிந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜோஸ் கான்பியரை திருமணம் செய்துகொண்டார். வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்துவந்த ஜோஸ் கான்பியர் கடந்த டிசம்பர் மாதம் சொந்த ஊரான குளச்சலுக்கு வந்துள்ளார். அதன்பிறகுதான் கோட்டாறில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
ஜோஸ் கான்பியருக்கு மனைவி மீது சந்தேகம் இருந்துவந்துள்ளது. அதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோஸ் கான்பியர், உடலை பெட்ரூமில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருக்கிறார். ஸ்கூலுக்கு போய்விட்டு வந்த மகள்கள் அம்மா எங்கே என கேட்டுள்ளனர். உறவினர் வீட்டுக்கு போனதாக பொய் சொல்லியிருக்கிறார் ஜோஸ் கான்பியர். பிள்ளைகள் அம்மாவின் மொபைலுக்கு போன் செய்தபோது, மொபைல் வீட்டில் இருந்தது. இதையடுத்து வீட்டில் அம்மாவை தேடியதால் ஆத்திரம் அடைந்த ஜோஸ் கான்பியர் இரண்டு குழந்தைகளையும் கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அமுக்கியுள்ளார்.
இரண்டு நாட்களாக வீட்டை திறக்காமல் குழந்தைகளை கட்டிப்போட்டுள்ளார் ஜோஸ் கான்பியர். குழந்தைகள் கண்ணீர்வடித்தபடியே வீட்டில் கிடந்துள்ளன. நேற்று திடீரென மூத்த மகள் கட்டுகளை எப்படியோ அவிழ்த்துவிட்டு சத்தம்போட்டதால் கத்தியால் கழுத்தில் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் அந்த முயற்சியை கைவிடட ஜோஸ் கான்பியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் தான் மூத்த மகள் வெளியே வந்து அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டவரால் குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள்
