தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், `கோவை வடக்கு தாலுகா விவசாயிகள் கடந்த 1975-ம் ஆண்டுக்குப் பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். அதில் சின்ன வெங்காயம் முக்கியப் பயிராக இருந்து வருகிறது. தற்போது சின்ன வெங்காயம் குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர். அதனால் அரசு கூடுதல் விலைக்கு வாங்க முன்வர வேண்டும்.
குறிப்பாக, கடந்த 1995-ம் ஆண்டு `நாபெட்’ மூலம் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்ததுபோல, கிடங்கு அமைத்து விலை குறையும் காலங்களில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்ததை, அரசே நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ``நாட்டின் சின்ன வெங்காயம் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர்,திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தோட்டத்தில் இருந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.7-க்குத்தான் விலை நிர்ணயம் செய்து எடுக்கின்றனர். ஆனால், அதை கடைகளில் கிலோ ரூ.22-க்கு விற்பனை செய்கின்றனர். அதனால்தான், தமிழ்நாடு அராசங்கம் குறைந்தபட்சம் ரூ.10 முதல் 15-க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் மக்களும் பயனடைவார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மனு அளித்துள்ளோம்” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/WOCF65e
via
