ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு தஞ்சாவூர், நாகை மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து பேசப்படுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். ஆனாலும் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தஞ்சாவூரில் நடுக் கடலில் மிதந்த ஐந்து கஞ்சா மூட்டைகளை மீனவர் ஒருவர் கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையைச் சேர்ந்தவர் மீனவர் சோமசுந்தரம். இவர் தனக்கு சொந்தமான படகில், சக மீனவர்களுடன் சுமார் 7 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடலில் பெரிய அளவிலான ஐந்து சாக்கு மூட்டைகள் மிதந்துள்ளது. இதை பார்த்த மீனவர் சோமசுந்தரத்துக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு கடலில் பெரிய மூட்டைகள் மிதப்பதாக தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கடலோர காவல் படை அறிவுறுத்தலின் பேரில், ஐந்து மூட்டைகளையும் ஏற்றிக்கொண்டு கரைக்கு திரும்பினார்.
கரையில் நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பரத் சீனிவாசன், அதிராம்பட்டினம் கடலோர காவல்படை ஆய்வாளர் மஞ்சுளா, உள்ளிட்ட போலீஸார் மீனவர் சோமசுந்தரம் ஏற்றி வந்த மூட்டைகளை கைப்பற்றி அதிராம்பட்டினம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு எடுத்து சென்று சோதனை நடத்தினர்.
இதில் கடலில் மிதந்த ஐந்து மூட்டைகளும் கஞ்சா மூட்டை என தெரிய வந்தது. பேக் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை சாக்கில் வைத்து மூட்டையாக கட்டியுள்ளனர். அதன் எடை மொத்தம் 160 கிலோ, மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் கூறுகையில் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்த முயன்றதா என்றும் யார் கடலுக்குள் போட்டார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், கஞ்சா மூட்டைகளை படகில் ஏற்றி வந்து ஒப்படைத்த மீனவர் சோமசுந்தரத்துக்கு போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/7pqC1Oj
via
