தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் பகுதியைச் சேர்ந்தவர் பொன் முனியசாமி. இவரிடம், மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த ராஜ் மற்றும் முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஆகிய மூன்று பேரும் கடந்த 01.12.2019 அன்று அறிமுகமாகி கோவையில் உள்ள தங்களுடைய `சன்மேக்ஸ்’ என்னும் முதலீட்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10% லாபம் ஈட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய பொன்முனியசாமி ரூ.18 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
இதைப் போலவே, தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி, ரூ.5,25,000, செல்வராஜ் என்பவர் ரூபாய் ரூ.7,35,000, சந்தனகுமார் என்பவர் ரூ.84,000, குருசாமி என்பவர் ரூபாய் ரூ.3,78,000 மற்றும் ரகுராமன் என்பவர் ரூ. 84,000 என மொத்தம் ரூ.36,06,000 பணத்தை சன் மேக்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனை அடுத்து மூன்று முகவர்களும், ஆறு பேரின் முதலீட்டுத் தொகைக்கு சில மாதங்கள் வரை 10% லாபத்தினை மட்டும் கொடுத்துள்ளனர்.
பின்பு, ``கம்பெனி லாஸ் ஆயிடுச்சு. உங்களோட முதலீட்டுத் தொகையும் நஷ்டம் அடைஞ்சுட்டு. முதலீடு செஞ்ச பணத்தை திருப்பித் தரமுடியாது. அடிக்கடி பணம் கேட்டு வந்தால் வழக்கு தொடர்வோம்” என மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இது குறித்து பொன்முனியசாமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையிலான தனிப்படையினர் மூன்று முகவர்களில் ராஜ் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், இது குறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த சிவராம கிருஷ்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
``பொதுமக்கள் தங்களின் பணத்தினை முதலீடு செய்யும் போது அந்த நிறுவனங்களைப் பற்றி நன்கு அறிந்தபிறகு முதலீடு செய்யுங்கள். இது போன்ற மோசடி நிறுவனங்களில், மோசடி முகவர்கள் கூறும் ஆசை வார்த்தையை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தினை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் ” என மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் கூறியுள்ளார்.
இந்த சன் மேக்ஸ் நிறுவனம் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலும் தனது கைவரிசையைக் காட்டி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இந்த நிறுவனத்தில் ரூ.17 கோடி பணத்தை போட்டு ஏமார்ந்திருப்பதாக காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/NvpjsU1
via
