திருப்பத்தூர்: மலைப் பாதையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து! - மூன்று சிறுமிகள் உட்பட 7 பேர் பலி

0

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை நெடிதுயர்ந்த மலைகளால் இணைக்கிறது ஜவ்வாது மலைத்தொடர். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரில், பார்வைக்கு அகப்படாத நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில், பெரும் மலைகளின் இடுக்குகளிலுள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகளின்கீழ் 32 கிராமங்கள் வருகின்றன. இந்த கிராமங்கள், திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டவை. இந்த நிலையில், அந்த மலையிலுள்ள சேம்பரை என்ற பகுதியிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மலை கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக இன்று காலை சென்றுள்ளனர். புலியூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரும் திறந்த மினிவேனில், அந்தக் கோயிலுக்குப் புறப்பட்டனர். வேனை பரந்தராமன் என்பவர் ஓட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள்

இந்த நிலையில், மலைப் பாதை சரியில்லாததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த கோர விபத்தில், 7 பேர் மரணமடைந்திருப்பதாக, அங்கிருந்து தகவல்கள் வருகின்றன. சுகந்தா, துர்கா, மங்கை, செல்வி மற்றும் 12 வயது சிறுமிகளான பவித்ரா, பரிமளா ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், 16 வயதாகும் ஜெயப்பிரியா என்ற சிறுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் மரணமடைந்துவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, திருப்பத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிற்பகலில் நடந்த விபத்து:

மலைப் பகுதி என்பதால், தொலைத்தொடர்பு வசதியில் பெரும் சிக்கல் நிலவுகிறது. மேற்கண்ட இந்த விபத்து, பிற்பகல் 11.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சிக்னல் பிரச்னைக் காரணமாக, காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குக்கூட தகவல் தெரிவிக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படியான துயரச் சம்பவங்கள் தொடராமல் தடுக்க தரமான சாலை வசதியை தமிழக அரசு அமைத்துத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5yo2QSu
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*