கோவை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. மக்கள் பிரச்னைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், திட்டங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரும்பிய பக்கமெல்லாம் கூச்சல், குழப்பம், மோதல் போக்கே நிலவியது.
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க கவுன்சிலர்கள் கறுப்புச் சட்டை, பதாகைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க-வினர் கடந்த 10 மாதகால தி.மு.க ஆட்சியின் குறைகள் குறித்துப் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க-வினர், “கோவை பிரச்னைக்கு காரணம் கடந்த 10 ஆண்டுக்காலமாக ஆட்சி செய்த அ.தி.மு.க-தான். சாலை, குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்கு அ.தி.மு.க-தான் காரணம்’’ என்று கூறினர்.
இது குறித்து இரு தரப்பினருக்கும் விவாதம் வலுத்தது. அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் என்பவரைத் தள்ளிவிட்டு, தி.மு.க-வினர் தாக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மறுபக்கம் தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் வெடித்தது. மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை, “தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது தவறு.” என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு,
“ஒரு மண்டலத் தலைவராக இருந்துகொண்டு நீங்களே இப்படிப் பேசலாமா... மத்திய அரசின் அழுத்தம் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இனியும் இந்தச் சொத்து வரி உயர்வு குறித்து இங்கு யாரும் பேச வேண்டாம்” என்று கூறினார்.
இதற்கிடையில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர்கள் முயன்றபோது, மக்கள் தொடர்பு அதிகாரி பாரதிதாசன் இடைமறித்து கறாராகப் பேசினார். இதனால் செய்தியாளர்களுக்கும், மக்கள் தொடர்பு அதிகாரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
உறுப்பினர்கள் பலரும் சாலை, சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் குறித்தே பேசினர். ஒருகட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, “100 வார்டுகளிலும் அந்தப் பிரச்னை உள்ளது. அதைப் படிப்படியாகச் சரிசெய்வோம். எனவே, வேறு ஏதாவது பிரச்னை இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியிலும் பல கவுன்சிலர்களும் செல்போனையே நோண்டிக்கொண்டிருந்தனர். 96-வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தார். இப்படிக் கடைசிவரை அலட்சியமும் அடிதடியாகவும் முடிந்தது மாமன்றக் கூட்டம்.
இதற்கிடையே, மாமன்றக் கூட்டத்தின் சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரனை இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட செய்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Gl9XmMy
via
