தஞ்சாவூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு கொடுக்க வலியுறுத்தி பாஜக தலைமை கொடுத்த பணத்தை மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவர் வேட்பாளர்களிடம் கொடுக்காமல் தானே வைத்து கொண்டதாக கட்சியினர் சிலரே தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனராம், இது குறித்து மாநிலத் தலைவரான அண்ணாமலை ரகசியமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் வெளியான தகவல் தஞ்சை மாவட்ட பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் பண்ணவயல் இளங்கோ. தென்னை மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்காக கொடுக்க சொல்லி பாஜக தலைமை பண்ணவயல் இளங்கோவிடம் பணம் கொடுத்துள்ளதாம். அந்த பணத்தை ஒரு சில வேட்பாளர்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு, மீதியை அவரே வைத்து கொண்டதாக வேட்பாளர்களாக போட்டியிட்ட சிலர் தலைமைக்கும், மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் புகார் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த புகார் குறித்து ரகசியமாக விசாரிக்க அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், மாநில அளவில் பொறுப்பில் உள்ள இருவர் இதனை விசாரித்து வருவதாக பாஜக வட்டத்தில் பேசப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தோம், ``தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் பி.ஜே.பி வேட்பாளர்கள் 27 வார்டுகளில் போட்டியிட்டனர். தேர்தல் செலவுக்காக முதல் கட்டமாக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் பாஜக தலைமை அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ 25,000 செலுத்தியது.
அதன் பிறகு தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோவிடம் வேட்பாளர்களின் தேர்தல் செலவிற்கு கொடுப்பதற்காக ரூ. 30 லட்சம் வழங்கியது. இதனை பண்ணவயல் இளங்கோ கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டார். பணம் வாங்கும் போது முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனராம். வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்து விட்டு சென்ற பிறகு தனக்கு நெருக்கமான சில வேட்பாளர்களுக்கு மட்டும் இளங்கோ பணம் கொடுத்தார். இதன் மூலம் மொத்தம் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகியிருக்கும். மீதமிருந்த 25 லட்சம் பணத்தை வேட்பாளர்களுக்கு கொடுக்காமல் தானே வைத்து கொண்டார்.
விவரம் அறிந்த சிலர் பணம் கேட்டதற்கு செலவாகிவிட்டது என சொல்லியிருக்கிறார். தேர்தலில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ தலைமை கொடுத்த பணத்தை அந்தந்த வேட்பாளர்களிடம் அவர் கொடுத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் பணத்தை தானே எடுத்து சென்றார். மூன்று வார்டுகளுக்கு ஒருவர் வீதம் தேர்தல் பணிகள் செய்வதற்கு நிர்வாகிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் செலவுக்கு ஒத்த பைசா கூட தரவில்லை.
இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகமாக கமாலலயத்திற்கு சிலர் புகார் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை அண்ணாமலை கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டதா இல்லை பண்ணவயல் இளங்கோ எடுத்து கொண்டாரா என்பதை கண்டுபிடிக்க அண்ணாமலை நிர்வாகிகள் சிலரிடம் ரகசியமாக வலியுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் மாநில நிர்வாகிகள் இருவர் இதனை விசாரித்து வருகின்றனர். கட்சி தலைமை கொடுத்த பணத்தை வேட்பாளர்களுக்கு கொடுக்காதது கண்டுபிடிக்கப்பட்டால் பண்ணவயல் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கமலாலயம் வட்டாரத்தில் பேசப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து பண்ணவயல் இளங்கோவிடம் பேசினோம், ``தேர்தல் செலவுக்கான முதல் தவணை வேட்பாளர்களின் வங்கி கணக்கின் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக தலைமை மூலமாக என்னிடம் பணம் கொடுத்தனர். ஒவ்வொரு வேட்பாளரிடமும் நோட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டு நான் பணத்தை கொடுத்திருக்கிறேன். கட்சி பணிகளை சரியாக செய்யாத சிலர், கட்சியின் வளர்ச்சி குறித்து கவலைபடாத விஷமிகளான சிலர் இது போன்ற பொய் புகார்களை பரப்பி வருகின்றனர்.தெற்கு மாவட்ட பொருளாளரை உடன் வைத்து கொண்டே வேட்பாளர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சிலர் கட்சி வேலையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்வதுடன் இது போன்ற பொய்யான புகார்களை கிளப்பி வருகின்றனர்” என விளக்கம் அளித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/JRLN9Kn
via
