ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகள், தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டதுடன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் சரவணக்குமார். இவர் பதவியேற்றதிலிருந்தே நகரம் வளர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையிலிருந்த மாநகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தை பெருக்கி வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார். குறிப்பாக மாநகராட்சிக்கு சொந்தமான தனி நபர்கள் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இடங்களை மீட்டெடுத்தார். இதனால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆணையர் சரவணக்குமாருக்கு நற்பெயர் ஏற்பட்டதுடன் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் வாடகைக்கு விட்டது உள்ளிட்ட பல காரணங்களால் தஞ்சாவூர் தி.மு.க எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்திற்கு சரவணக்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கூட்டணிக் கட்சிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நீட் தேர்வு ரத்து மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாக காரணத்தால் புறக்கணித்தனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் விவாத்துக்கு உள்ளானது. இந்நிலையில் முதல்வர் புறக்கணித்த தேநீர் விருந்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக இருக்கும் சரவணக்குமார் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ தஞ்சாவூர் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தின் ஆதரவாளர்கள் இதனை சர்ச்சையாக்கி வருவதாக மாநகராட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இது குறித்து தி.மு.க மாநகராட்சி கவுன்சிலரும், கட்சியின் மாநகர துணை செயலாளருமான நீலகண்டன் கூறுகையில், ``நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்காக தமிழக ஆளுநர் ரவிக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வில்லை. இதனால் ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தமிழ் புத்தாண்டு தின நிகழ்ச்சிக்காகவும் ஆளுநர் ரவி தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்ததுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு கொடுத்தார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் அந்த தேநீர் விருந்தினை ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள், தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் ஆணையர் சரவணக்குமார் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை பேசி வரும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை வரவேற்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் தனியார் டிவி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
தமிழக அரசுக்கு கீழ் செயல்படும் அரசு அதிகாரி ஒருவர் முதல்வர் புறக்கணித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எங்களை போன்ற திமுகவினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றுதல், கடைகள் வாடகைக்கு விட்டது போன்றவற்றில் அவர் திமுக அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டார். ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக நாங்கள் ஏற்கெனவே கூறி வந்தோம்.
அதே போல் தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு கோவை, திருப்பூர் பகுதியிலிருந்து ஒப்பந்தக்காரர்களை அழைத்து வந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நெருக்கமான கம்பெனிகளுக்கு ஒப்பந்த பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற பலவற்றில் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். ஆணையர் சரவணக்குமார் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது, தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவும் குளறுபடி உள்ளிட்ட அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மாநகராட்சி அலுவலர்கள் மட்டத்தில் பேசினோம், ``பெற்றோரை இழந்த மாணவன் ஒருவர் டாக்டருக்கு படிப்பதற்கு ஆணையர் சரவணக்குமார் உதவி செய்து வருகிறார். ஒரு பக்கம் வறுமை, மறுபக்கம் ஆதரவுக்கு யாரும் இல்லை என்ற நிலையில் முறைசாராக் கல்வி மூலம் வேலை செய்து கொண்டே ப்ளஸ் டூ மற்றும் நீட் தேர்வில் பாஸ் செய்து டாக்டருக்கு படிக்கும் அளவிற்கு வளர்ந்த அந்த மாணவனுக்கு ஆறுதலாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் அந்த மாணவன் ஆணையரை அப்பா ஸ்தானத்தில் வைத்து நெகிழ்ந்து வருகிறார்.
பாரதியார் குறித்த அந்த மாணவன் எழுதிய கட்டுரை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பரிசு கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ``எனக்குனு யாரும் இல்ல பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள நீங்க வரணும்" என அந்த மாணவன் அழைத்தன் பேரில் ஒரு கார்டியனாக சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மரியாதைக்காக அண்ணாமலை உள்ளிட்டவர்களை சந்திக்க நேர்ந்தது. எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம் தரப்பினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதனை சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து ஆணையர் சரவணக் குமாரிடம் பேசினோம், ``ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது குறித்து மேலிடத்திற்கு விளக்கமாக தெரிவித்து விட்டேன்” என்பதோடு முடித்துக்கொண்டார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/E9MKFcN
via
