மதுரை : ஆயிரக்கணக்கானோர் காண விமர்சையாக நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்!

0

கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் திருமணமான பெண்கள் புதுத்தாலி அணிந்து வழிபட்டனர்.

புதுத்தாலி அணிந்த பெண்கள்

வடக்கு ஆடி- மேல ஆடி சந்திப்பில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. 2 டன் எடை அளவுக்கு நறுமணம் வீசும் ஏழு வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன், மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடது புறத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் தனி தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளினர்.

மணப்பெண் மீனாட்சியம்மனுக்கு முத்துக்கொண்டை போட்டும் வைரக்கிரீடத்துடன், மாணிக்க மூக்குத்தி தங்கக்காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கபட்டது.

விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய திருமண விழாவில் சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்ட பின்னர் சிவாசார்யர்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க, திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

திருக்கல்யாணம் நடைபெறும் அதே நேரத்தில் பெண்கள் புதிய தாலி கயிற்றில் திருமாங்கல்யத்தை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமணத்தை காண வந்த மக்கள்

வந்திருந்த பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் குங்குமம், மங்கலநாண் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் பி்.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறநிலையத்துறை செயலாளர், கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையர், நீதிபதிகள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

இரவு மீனாட்சியம்மன் அனந்தராயர் பூப்பல்லக்கிலும், சுவாமி யானை வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/k0cUbra
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*