`ஜாதி, மதம் பார்க்காம கலந்துக்குவோம்!' - புதுக்கோட்டையில் களைகட்டிய மீன்பிடித் திருவிழா

0

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன்பு, இங்குள்ள விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி, மதம் பார்க்காமல், மக்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்படித் திருவிழாவில் கலந்து கொண்டு கூடைகளில் மீன்களை அள்ளிச் செல்வார்கள். அந்த வகையில் பொன்னமராவதி அருகே ஏனாதி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில், மீன்பிடி திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இங்குள்ள பெரிய கண்மாய் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது.

மீன்பிடி திருவிழா

இந்தக் கண்மாயில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குவிந்தனர். பாரம்பர்யம் மாறாமல், கண்மாயில் இறங்கியவர்கள் வலை, கூடை, பரி என தங்களுக்கு கிடைத்த மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு லாவகமாக மீன்களைப் பிடித்தனர். நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் உள்ளிட்ட மீன்களும் இவர்களின் வலையில் சிக்கின. பிடித்த மீன்களை பெரிய கூடைகளில் போட்டு மக்கள் அள்ளிச் சென்றனர். விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மீன் பிடித் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களிடம் கேட்டபோது, ``ஏனாதி பெரிய கண்மாய் எங்க பகுதியில இருக்க பெரிய கண்மாய். சித்திரை மாதத்துல கோடைக்கு முன்னாடி எப்பவுமே மீன் பிடித்திருவிழாவை நடத்திடுவோம். போதிய மழை இல்லை, கொரோனா பிரச்சினை என சில ஆண்டுகளாக திருவிழாவே நடக்கலை. ரொம்ப வருஷம் கழிச்சி திருவிழா நடந்ததால, ரொம்ப தூரத்துல இருந்து எல்லாம் மக்கள் வந்து கலந்துக்கிட்டாங்க.

மீன்பிடி திருவிழாவில் ஊர் மக்கள்

இந்த வருஷம் வலை போடாமலே ஒரு சிலருக்கு கைகள்லயே மீன்கள் வந்து கிடைச்சது. பலருக்கும் வலையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரையிலான எடையிலும் மீன்கள் கிடைத்தன. அனைவரும் மீன் பிடிப்போம். சிலருக்கு மீன்களே சிக்காது. அதிக மீன்கள் பிடித்தவர்கள் அவர்களுக்கு கொஞ்சம் மீன்களைக் கொடுத்து உதவுவோம். சாதி, மத பேதம் பார்க்காமல் அனைவரும் திருவிழாவில் கலந்துகொண்டு மீன் பிடிப்போம்" என்றனர் உற்சாகத்துடன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/FwmHcXU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*