ஆரோவில்: ``50 ஆண்டுகள் கடந்தும் அன்னையின் கனவு நிறைவேறவில்லை!" – ஆளுநர் தமிழிசை

0

புதுச்சேரி மாநிலத்தையொட்டிய தமிழ்நாட்டுப்பகுதியான ஆரோவில் நகரத்தில், நேற்று மாலை ஆரோவில் சமுதாய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, ``1968-ம் ஆண்டு சமாதான பூமியான ஆரோவில் நகரை என்ன நினைத்து அன்னை தொடங்கினார்களோ அந்த கனவு முழுமைடைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நிர்வாகக் குழு செயல்பட்டு வருகிறது என்பதை முதலிலேயே மிகத் தெளிவாக பதிவு செய்கிறேன். உலகிற்கு ஒரு மகுடம் போல இந்த நகரம் உருவாக வேண்டும் என்றும், ஏறக்குறைய 50,000 பேர் இங்கே வாழ வேண்டும் என்றும், உலகத்திற்கு ஒரு உதாரணமான அமைதி நகரமாக விளங்க வேண்டும், பாலின, நாடு, சாதி, மத வேற்றுமைகள் இல்லாமல் வாழக்கூடிய ஒற்றுமை நகரமாக இது அமைய வேண்டுமென்றும் அன்னை நினைத்தார்கள்.

ஆளுநர் தமிழிசை

ஆனால், துரதிஷ்டவசமாக 50 ஆண்டுகள் கடந்தும் அவரது கனவு இன்று நிறைவேறவில்லை. அன்னையின் கனவு நனவாவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நிர்வாகக் குழு பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. தற்போதைய செயலர் மிகவும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் இதற்கு தலைவராக இருக்கிறார். நிர்வாகக் குழு தொடர்ந்து கூடுகிறது. திட்டமிடப்பட்டு அதற்கேற்ப பணிகள் நடைபெறுகின்றன. இயற்கையை அழிக்க வேண்டும் என்றோ, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ அல்லது இங்கிருப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டும் என்றோ எந்த நோக்கமும் கிடையாது. ஆக்கப்பூர்வமான நோக்கம் மட்டும்தான்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எங்கு எடுக்கப்பட்டாலும் அங்கு சிறு சிறு பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய இடையூறுகளைத்தான் நாங்களும் சந்திக்கிறோம். ஆனால் அன்னையின் கனவு நகரம் வெகுவிரைவில் உருவாக்கப்படும். சில இடங்களில் போதைப்பொருள் நடமாட்டம் போன்ற சில சமூக விரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அதையும் களைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நிர்வாகக் குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரந்துபட்ட இடம் என்பதனாலும் நிறைய இடம் காலியாக இருப்பதனாலும் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படுகிறது. கனவுத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம், ஆனால் எந்த விதத்திலும் பசுமை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய மரங்கள் நடப்படுகின்றன. சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அந்த எண்ணிக்கையை குறைத்து இருக்கிறோம். அவர்களின் எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்பு கண்காணிக்கப்படாமல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது கண்காணிக்கப்பட்டு வரைமுறை படுத்தப்பட்டு வருகிறது. சிறு சிறு குழப்பத்தை ஏற்படுத்தி வருபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் அன்னையின் கனவு நிறைவேற வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/YzEvNsS
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*