திருவாரூர்: வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, நகை, பணம் கொள்ளை... ஒரே பாணியில் இரு சம்பவங்கள்!

0

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே, ஒரே பாணியில், ஒரே சமயத்தில் இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றிருப்பது இப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருப்பதோடு, மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவாரூர் காவல்துறை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமலதாசன். இவர் குன்னியூர் ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது கோடைகாலம் என்பதால், இரவு நேரத்தில் வீட்டில் புழுக்கமாக இருந்ததால், கமலதாசன் தனது குடும்பத்தினரும் வீட்டின் முன்பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்று மாயமாகியிருக்கிறார்கள். கமலதாசன் அவரின் குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டதோ, பீரோவில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதோ இவர்களுக்கு தெரியவில்லை.

மறுநாள் காலை பொழுது விடிந்ததும், வீட்டின் பின்புறம் சென்றபோதுதான் கதவு உடைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டுப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கமலதாசன் இது குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர மேற்கொண்டுள்ளார்கள்.

கொள்ளை

இதே ஊரில் இதே பாணியில், வேறொரு வீட்டிலும் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருக்கிறது. மந்தக்கரை தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். நள்ளிரவு இவரின் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 கிராம் தங்க நகை, வெள்ளிக்கொலுசு மற்றும் 1,500 ரூபாய் பணத்தை திருடி சென்றிருக்கிறார்கள். வீட்டில் ஆள்கள் இருக்கும் போதே, ஒரே பாணியில், ஒரே சமயத்தில் நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் இப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஊராட்சி மன்ற துணை தலைவர் கமலதாசன் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த, அதே மர்ம நபர்கள் தான் ஜெயராமன் வீட்டிலும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளார்களா ? அல்லது வேறு நபர்களா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, திருத்தறைப்பூண்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியிருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/ZHFScUC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*