நெல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த தொழிலாளி - கடிதத்தில் உருக்கமாக எழுதியிருப்பது என்ன?

0

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்கள், தங்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பது வழக்கம். அதன்படி இன்றைய கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

மனு அளிக்க வந்தவர்களை ஆட்சியர் அலுவலக வாயிலில், காவல்துறையினர் பலத்த சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கந்துவட்டி புகார் தொடர்பாக மனு அளிக்க வந்த இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவத்துக்குப் பின்னர் சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வெளியே மனு அளிக்க வந்திருந்த தொழிலாளி ஒருவர், விஷம் குடித்து மயங்கிச் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷம் குடித்தவரை மீட்கும் போலீஸார்

அவருடன் வந்திருந்தவரிடம் போலீஸார் விசாரித்ததில், விஷம் அருந்தியவரின் பெயர் ஐயப்பன் என்பதும் கூலித் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கால்கரை கிராமத்தைச் சேர்ந்த, அவருக்கும் அவரின் சகோதரருக்கும் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்த அதிருப்தியில் விஷம் குடித்ததும் தெரியவந்தது

ஐயப்பன் கைப்பட எழுதியிருந்த மனுவில், ”ராதாபுரம் பகுதியில் உள்ள கால்கரை கிராமத்தில் எனது குடும்பச் சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தை நானும் சகோதரரும் சமமாகப் பிரித்துக் கொண்டோம். ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த இருவர் ஆக்கிரமித்துக் கொண்டனர். அதே போல அப்பகுதியில் படிக்காத மக்களை ஏமாற்றி இருவரும் பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதற்கு அதிகாரிகளும் துணையாக இருக்கிறார்கள்.

எனது நிலம் பறிபோன நிலையில், கடனில் நான் கஷ்டப்படுகிறேன். அதனால் எனது நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். அத்துடன், தவறு செய்த இருவர் மீது மட்டும் அல்லாமல் அதற்கு உடந்தையாக இருந்து போல ஆவணங்கள் மற்றும் பட்டா போட்டுக் கொடுத்த அதிகாரிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “என் மரணத்துக்குப் பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் மூலம் மீட்கப்படும் நிலத்தை விற்று அதில் கிடைக்கும் தொகையை கடனாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் இருக்கும் பணத்தில் இரண்டு லட்சம் ரூபாயை இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகக் கொடுக்க வேண்டும். அதை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும்” என்று உருக்கமாக எழுத்தியிருக்கிறார்.

சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயப்பன்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவர் விஷம் அருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் வந்த நபரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம் அருந்திய ஐயப்பன், உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/t7n1sxv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*