செக்கை எந்த வங்கி கணக்கில் போடுவது என்பதில் வந்த பிரச்னை?! - கேரள நடிகை மரணத்தில் நீடிக்கும் மர்மம்

0

கேரள மாநிலம் காசர்கோடு செறுவத்தூரைச் சேர்ந்தவர் சஹானா(20). இவர் நகைகடை விளம்பரங்களில் மாடலாக இருந்துவந்தார். இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜ்ஜாத் என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதையடுத்து சினிமாவில் நடித்தும் வந்துள்ளார். சஹானாவும், சஜ்ஜாத்தும் கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு பறம்பில் பஜார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் நள்ளிரவு திடீரென சஹானா இறந்துள்ளார். வீட்டு அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் கூறியுள்ளார். ஆனால், சஜ்ஜத் ஏற்கனவே மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக சஹானாவின் தாய் உமைபா கூறியிருக்கிறார்.

இறந்த நடிகை சஹானா

சஹானா வசித்துவந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "இரவு நேரத்தில் சஹானா பேசவில்லை என அவரின் கணவர் சஜ்ஜாத் சத்தம்போட்டார். நாங்கள் அங்குசென்று பார்த்தபோது சஜ்ஜாத் தனது மடியில் சஹானாவின் உடலை கிடத்தியிருந்தார். அவர் ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தார். இதுபற்றி வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சஜ்ஜாத்தையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்" என்றனர்.

இதுபற்றி சஹானாவின் தாய் உமைபா கூறுகையில், "பிறந்தநாள் விருந்தில் கலந்துகொள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும் என மகள் கூறியிருந்தாள். கணவன் சஜ்ஜாத் அடிக்கடி கொடுமைப்படுத்துவது பற்றி மகள் போனில் சொல்லியிருந்தாள். உன் மகளை கொன்றுதான் அங்கு அனுப்புவேன் என்று ஒருமுறை சொல்லியிருந்தார். தனது மருத்துவ செலவுக்காக வைத்திருந்த செக் -கை கேட்டு கொடுமைப்படுத்தினார்" என்றார்.

சஹானா

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "சஹானா மரணத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் கணவர் சஜ்ஜாத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம். சினிமாவில் நடிக்கச் சென்றதால் கிடைத்த சம்பள செக்-கை எந்த வங்கியில் போடுவது என்பதில் கணவன் அடிக்கடி தகராறு செய்துள்ளதாக சொல்கிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகுதான் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/NTD5tXk
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*