தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று திருவாருர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, பின்னர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தி.மு.க. அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால், தி.மு.க.-வினர் மட்டுமல்லாமல் இதன் கூட்டணி கட்சிகளும் தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவாவடுதுறை ஆதின மடத்துக்குச் செல்லும் வழியில் ஆளுநர் கான்வாய் மீது, சிலர் கருப்புக்கொடிகளை வீசினர். ஆளுநர் பாதுகாப்பில் குளறுபடி என இது சர்ச்சையும் ஆனது. இந்நிலையில்தான் மே 27-ம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் ஆளுநர் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி நிரல் வெளியானது. திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் மத்திய பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை ஐந்து மணியளவில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார் என தகவல் வெளியானது. இதனால் காவல்துறை உயரதிகாரிகள் இப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர்.
கோயிலின் கிழக்கு கோபுர பெரிய வாசல் வழியாக ஆளுநர் கோயிலுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. மாலை 5.38 மணியளவில் தியாகராஜ சுவாமி கோயிலின் கிழக்கு கோபுர பெரிய வாசலில் ஆளுநரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்க, மேளதாளங்களுடன் கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய உயரதிகாரிகள் காத்திருந்தனர். ஆளுநர் கார் இங்கு வந்து நின்ற நேரத்தில், கிழக்கு கோபுரத்தில் இருந்த தேன்கூட்டை, புறாக்கள் கலைத்துவிட, காவல்துறை அதிகாரிகள் சற்று பதற்றமடைந்தனர்.

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, கிழக்கு கோபுர பெரிய வாசல் வழியாக கோயிலுக்குள் செல்லாமல், கல்கோபுர வாசல் வழியாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். பிரதோச நாள் என்பதால் சிறப்பு வழிப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள், கோயிலுக்கு வந்திருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவர்களுக்கு எந்த வித தடையையும் காவல்துறையினர் ஏற்படுத்தவில்லை. மூலவர் சந்நிதானத்தில் வழிபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பிறகு இக்கோயில் உள்ள மற்ற சந்நிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பி சென்றார். ஆளுநரை நல்ல விதமாக அனுப்பி வைத்ததால் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/do3CQAM
via
