கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்தோடு, அமைச்சராக இருந்த கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கரூர் மாநகரத்தில் உள்ள சாலைகளில் இருபுறமும், 'கானகத்தில் கரூர்' என்ற பெயரில் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களிலும் இப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட இந்த மரக்கன்றுகளை தொடர்ந்து நீர் ஊற்றி, இந்த டிரஸ்ட் நிர்வாகிகள் வளர்த்து வருகிறார்கள். அதோடு, மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்புக்காக கூண்டுகளை அமைத்து, அதில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என்ற போர்டையில் பதித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், அந்த போர்டுகளையும், கூண்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த முயல்வதாக அ.தி.மு.கவினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதுசம்பந்தமாக, கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பாக, கரூர் நகரம் முழுவதும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மேற்படி டிரஸ்ட்டின் சார்பாக கடந்த 3 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி, மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தி விட கூடாது என்ற காரணத்தினால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்ட கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'சேதப்படுத்த வேண்டும்' என்ற நோக்கத்தில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என்று பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றினர். அதேபோல, ஒரு சில இரும்பு கூண்டுகளையும் அகற்றினர்.
இது சம்பந்தமாக, டிரஸ்ட் சார்பாகவும் மற்றும் பொதுமக்கள் உரிய புகார் கொடுத்ததன் அடிப்படையில் மேற்படி கூண்டுகளும், பலகைகளும் மீண்டும் பொருத்தப்பட்டன. இந்த நிலையில், மேலே சொன்னது போல மீண்டும் மரக்கன்றுகளின் கூண்டுகளை சட்டவிரோதமாக அகற்றி உள்ளார்கள். இதுபற்றி, மரக்கன்றுகள் அமைந்து இருக்கும் இடத்திற்கு அருகில் கடைகள் வைத்து இருப்பவர்களிடம் விசாரித்த போது, கரூர் மாநகராட்சி ஊழியர்கள், கூண்டுகளை அகற்றியதாக தெரிவித்தனர்.
இதனை எங்களது அ.தி.மு.க கழக நிர்வாகிகளும், எம்.ஆர்.வி டிரஸ்ட் உறுப்பினர்களும் பார்வையிட்ட போது, கரூர் 80 அடி சாலை நுழைவாயில் உள்ள டீ கடைக்கு அருகில் உள்ள மரக்கன்று கூண்டினை மாநகராட்சி துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் அகற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று அதை தடுத்து, 'ஏன் இப்படி செய்றீங்க?' என்று கேட்டதற்கு, மேற்படி நபர்கள் தகாத கெட்ட வார்த்தைகளால் எங்கள் கழக நிர்வாகிகளை திட்டியதோடு, கரூர் மாநகரில் உள்ள மரக்கன்று கூண்டுகள் அனைத்தையும் அகற்ற போவதாகவும், 'உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்' என்று சொல்லி, அந்த சாலை ஓரத்தில் இருந்த பல மரக்கன்று கூண்டுகளை அகற்றி விட்டனர். மேலும், துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன்தான் ஏற்கனவே மரக்கன்று கூண்டுகளில் பொருத்தி இருந்த பெயர் பலகைகளை எடுக்க சொன்னார் என்று துப்புரவு பணியாளர் சொன்னது, எங்களது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் அதே போல அராஜகமாக அனைத்து கூண்டுகளையும் அகற்றிவிட்டனர். இந்த சம்பவம் 16.06.2022 மதியம் சுமார் 4.30 மணியளவில் நடைபெற்றது. இது போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்தவாறு உள்ளனர். இதனால், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் அனைத்தும் சேதமாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்படி சம்பவத்திற்காக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மரக்கன்று கூண்டுகளை அகற்றாமல் பாதுகாக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.கவினர், ``கரூர் மாவட்டம் முழுக்க இந்த மரக்கன்றுகளை நட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு சிறப்பாக பராமரித்து வருகிறது. கரூர் மாநகருக்குள் எந்த சாலையில் நுழைந்தாலும், இரண்டுபக்கமும் இருபதடிக்கும் மேல் வளர்ந்து நிற்கும் இந்த மரக்கன்றுகள்தான் எல்லோர் பார்வைக்கும் தெரியும். இதனால், வறட்சிமிகுந்த கரூர் மாநகருக்குள் தற்போது குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டிரஸ்ட் சார்பாக தற்போதும் தண்ணீர் ஊற்றி ஒவ்வொரு மரமும் பாதுகாக்கப்படுது.
இதனால், மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு மரத்தை சுற்றியும் இருக்கும் பாதுகாப்பு கூண்டுகளில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என்று எழுதப்பட்ட போர்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கிடைக்கும் பெயரை பொறுத்துகொள்ள முடியாத அமைச்சர் செந்தில் பாலாஜிதான், இப்படி மாநகராட்சி ஊழியர்கள் வைத்து, மரத்தை சுற்றியுள்ள கூண்டுகளை அகற்றும் பணியை செய்ய வைத்திருப்பதாக சொல்றாங்க. இதை நாங்க தடுத்து நிறுத்துவோம்" என்றார்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டால்,
"இதற்கும், எங்க அண்ணனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக ஓரிரெண்டு கூண்டுகளை அதிகாரிகள் அகற்றியிருக்கலாம். ஆனால், அதை வைத்து எங்க அண்ணன் பெயரை இதில் இழுத்துவிட்டு, சிண்டுமுடிய பார்ப்பது தேவையில்லாதது.
சில மரக்கன்றுகளை வைத்துவிட்டு, அதில் ஆயிரம் விளம்பரம் தேடும் அவர்கள் இதையும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள்" என்றார்கள்.
'பேருந்து நிலைய அரசியல், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரசியல், மேம்பால அரசியல் வரிசையில் இப்போது மரக்கன்று அரசியலா?' என்று கேட்டு, கரூர் மக்கள் தலைத்தலையாக அடித்துக்கொள்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/s5Xe3G9
via
