முதல்நாள் பள்ளிக்குப் போன குழந்தை, கவிழ்ந்த ஆட்டோ; சோகத்தில் குடும்பம்.. செல்போனால் விபரீதம்!

0

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. ஆட்டோ டிரைவரான அவர், அருகாமையில் உள்ள செய்துங்கநல்லூர், ஊத்துப்பாறை, வசவப்பபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை ஆட்டோ மூலம் கொண்டு சென்று பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் விடுவது வழக்கம்.

கவிழ்ந்த ஆட்டோ

வழக்கம் போல, நேற்று காலை பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிய அவர், அனவரதநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது. அதில், மாணவர்கள் ஆட்டோவுக்குள் சிக்கிக் கொண்டார்கள். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உதவி செய்ய வேண்டிய ஆட்டோ டிரைவர் ராஜி, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்

அந்தப் பகுதியில் இருந்த மக்கள், ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த செல்வநவீன் என்ற ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான். ஆட்டோவில் இருந்த ஏழு சிறுவர்கள் காயமடைந்தனர்.

பள்ளி மாணவன் செல்வநவீன்

காயமடைந்தவர்கள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பற்றி அறிந்ததும், உயிரிழந்த செல்வநவீன் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்குச் சென்ற முதல் நாளிலேயே செல்வநவீன் உயிரிழந்திருப்பது பெற்றோரை உலுக்கிப் போட்டுள்ளது.

ஆட்டோ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோவில் பயணித்த மாணவர்களிடம் பேசியபோது, ஆட்டோ டிரைவர் வேகமாக ஆட்டோவை ஓட்டியதுடன், செல்போனில் பேசியபடி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அனவரதநல்லூர் சாஸ்தா கோயில் அருகே வந்தபோது, அங்குள்ள சிறிய திருப்பத்தில் திரும்பும் வேளையில், டிரைவர் ராஜி கையில் இருந்து செல்போன் நழுவியுள்ளது. செல்போனை பிடிக்க டிரைவர் ராஜு குனிந்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவரை ராஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.

விபத்து (மாதிரி புகைப்படம்)

இது குறித்து மாணவனின் உறவினர்களான துரைராஜ், ஐசக் ஆகியோர் கூறுகையில், "ஆட்டோ டிரைவரின் அலட்சியம் காரணமாகவே சிறுவனின் உயிர் போயிருக்கிறது. கட்டடத் தொழிலாளியான சிறுவனின் தந்தை, முதன்முறையாக ஆட்டோவில் பையனை பள்ளிக்கு அனுப்பியபோது இந்த விபத்து நடந்திருக்கிறது. டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை ஓட்டுநரை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது. அதைக் கண்டிக்கிறோம். இனியும் இதுபோல ஒரு குழந்தையின் உயிர்கூட போகக்கூடாது. அதை உறுதிப்படுத்தும் வகையில், ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கண்காணிக்க வேண்டும்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/RLlkIsd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*