``அதிமுக, பாஜக உறவில் எந்தவித குழப்பமும் இல்லை" - சொல்கிறார் அண்ணாமலை

0

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் அரசுக்கு ரூ.77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பொருள்களைக் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல், தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முயற்சி செய்துள்ளனர். இதற்காக ரூ.450 கோடிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கிட, அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.100 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.

அண்ணாமலை

தமிழக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. இதனையடுத்து, பொங்கல் பொருள்களை தரமானதாக வழங்காத நிறுவனங்கள் வரும் காலங்களில் எந்த ஒப்பந்தங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என, தமிழக முதல்வர் அந்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் வைத்துள்ளார். அதில் ஒன்றான, ’அனிதா டெக்ஸ் கார்டு’ என்ற தனியார் நிறுவனம் மீண்டும் தற்போது இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது ஏன்?

ஊட்டச்சத்து பொருள்களை ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஏன் அரசு அனுமதி அளிக்கவில்லை? இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் இரண்டு நாட்களில் திறக்கப்பட உள்ளது. அப்போது குறைந்த விலை பட்டியல் கொடுத்த இரண்டு நிறுவனத்தின் விபரத்தை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்றவரிடம், அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அண்ணாமலை

அதற்கு பதிலளித்த அவர், ``அதிமுக, பாஜக இடையிலான உறவில் எந்தவித குழப்பமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி அந்த கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறிய கருத்து அவரவரிகளின் தனிப்பட்ட கருத்து. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய கருத்துக்கள்தான் அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து. எனவே இரண்டாம் கட்டத் தலைவர்களின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/yKaxvZU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*