வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்!

0

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். முருகனின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாக பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கக் கூடிய பலன், வைகாசி விசாகத் திருநாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதிகம். அத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா இன்று நடக்கிறது.

காவடி தூக்கி வந்த பக்தர்கள்

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன. மாலையில் சாயரட்சை தீபாராதனை முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடைகிறார்.

அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அதிலும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர்.

வரிசையில் பக்தர்கள்

நீண்ட வேல்களால் அலகு குத்தியும், பலவிதமான காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், பாரம்பர்யமாக சர்ப்பக்காவடி எடுத்து வந்து முருகபெருமானை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

கண்ணாடிப் பெட்டிக்குள் காவடியாக எடுத்த வந்த சர்ப்பத்தை கடற்கரை, வள்ளிக்குகையின் பின்புறம் விடுவது வழக்கம். இந்தாண்டு பக்தர்கள் சர்ப்பக்காவடி எடுத்து வர அனுமதியில்லை. மீறி எடுத்து வந்தால் சர்ப்பக்காவடி பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி., சரவணன் பாலாஜி தடை விதித்துள்ளார். இது ஆண்டுதோறும் பாரம்பர்யமாக சர்ப்பகாவடி எடுத்து வரும் பக்தர்கள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் குவிந்துள்ள பக்தர்கள்

கடற்கரை, கோயில் வளாகம், நாழிக்கிணறு, வள்ளிக்குகை, அய்யா வைகுண்டர் கோயில் என திரும்பும் திசையெங்கும் பக்தர்கள் நிறைந்துள்ளனர். செந்தூர் முழுவதும் பக்தர்களின் அரோகரா கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்று வருகின்றனர். 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/BfEYMcr
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*