நெல்லை: காலில் விழுந்து மன்னிப்பு கேள்; மறுத்தால் `ஊர் விலக்கம்’ - ஊர் கமிட்டி சர்ச்சை

0

நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குள் ஊர் கமிட்டி அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். ஊர் கமிட்டியின் நிர்வாகிகள் சிலர் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், சீட்டு நடத்தி வந்திருக்கிறார்கள். மக்களின் சீட்டு பணத்திலும் கமிட்டி நிர்வாகிகள் கையாடல் செய்துள்ளனர் என்கிறார்கள்.

ஊர் கமிட்டி காலில் விழும் முதியவர்

அதே பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ் மற்றும் பேச்சிராஜா ஆகியோர் ஊர் கமிட்டியின் முறைகேடுகளைத் தட்டிக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருமே இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். சுந்தர்ராஜ் கட்சியின் மாநகரச் செயலாளராகவும் பேச்சிராஜா கிளைச் செயலாளராகவும் உள்ளனர்.

ஊர் கமிட்டி குறித்து விமர்சனம் செய்ததால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் ஊர் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில், பேச்சிராஜாவை ஊரார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்கள். அவர் மறுத்து விட்டதால் அவரை ஊர் விலக்கம் செய்தனர். அத்துடன், அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்டனர்.

கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

ஆனால், கிராமத்தினர் சிலர் தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பேச்சிராஜா குடும்பத்தினரை அழைத்திருக்கிறார்கள். அத்துடன், சமீபத்தில் நடந்த பேச்சிராஜா திருமண விழாவிலும் கிராம மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பேச்சிராஜாவுடன் தொடர்பில் இருந்த சுமார் 60 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் ஊர் கமிட்டியினர்.

அதன் பின்னர், ஊர் விலக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஊர் கமிட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்று சிலர் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். பேச்சிராஜா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததுடன் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். அவரது புகார் தொடர்பாக ஜூன் 8-ம் தேதி காவல்துறை உதவி ஆணையர் விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார்.

ஆர்ப்பாட்டம்

விசாரணைக்கு ஆஜரான சுந்தர்ராஜ், பேச்சிமுத்து ஆகியோரை உதவி ஆணையர் விஜயகுமார் அவதூறாகப் பேசியதாக சி.பி.ஐ (எம்.எல்) கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன், கிராமத்தில் திருட்டு போன மின் மோட்டார் மற்றும் துணி மூட்டை எரிந்தது ஆகிய வழக்குகளில் இருவரையும் சிக்க வைக்கவும் போலீஸார் முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். அதைக் கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ(எம்.எல்) கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான வழக்கறிஞர் ஜி.ரமேஷ், “பாட்டபத்து கிராமத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டித்து குரல் கொடுத்த எங்கள் கட்சியின் நிர்வாகிகளை ஊர் விலக்கம் செய்தது தவறானது. அதைக் கண்டித்து எங்கள் நிர்வாகிகள் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.

புகாரை விசாரித்த உதவி ஆணையர் விஜயகுமார், ‘ஊர் கமிட்டி காலில் விழச் சொன்னால் விழ வேண்டியது தானே.. அது தானே நாட்டு நடப்பு. அதை ஏன் செய்யலை’ என்று ஏளனமாகப் பேசியிருக்கிறார். இந்த வழக்கை அவர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதோடு, மனித உரிமைக்கு எதிராகப் பேசியுள்ள அவர மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.

இதனிடையே, ஊர் கமிட்டி முன்பாக பாட்டப்பத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JmWND90
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*