தூத்துக்குடி: தடையில்லாச் சான்று வழங்கிட ரூ.3 லட்சம் லஞ்சம்; வி.ஏ.ஓ, ஆர்.ஐ சிக்கியது எப்படி?!

0

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள மேட்டுப் பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. 64 வயது விவசாயியான இவர், குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். கடந்த 2004-ல் குளத்தூர் அருகிலுள்ள கு.சுப்பிரமணியபுரம் விலக்குப் பகுதியில், 10.95 ஏக்கர் நிலத்தை அரசு இலவசப் பட்டாவாக வழங்கியுள்ளது. இந்த நிலத்தினை 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்ய முடியாது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த நிலத்தை விற்பனை செய்திட தடையில்லாச் சான்று பெற கோவில்பட்டி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற மனு அளித்துள்ளார்.

வி.ஏ.ஓ உமேஷ்குமார் - ஆர்.ஐ., செந்தில்முருகன்

இந்த மனு, விசாரணைக்காக குளத்தூர் கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமாரிடம் வந்தது. அவர் ரூ.5,000 லஞ்சமாகப் பெற்று வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை பரிசீலினை செய்து உறுதிபடுத்திட வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன், முனியசாமியை அழைத்து, ``ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் 10.95 ஏக்கர் நிலத்துக்கு ரூ.3.30 லட்சம் பணம் தரணும். பணம் கொடுத்தாதான் தடையில்லாச் சான்று தருவேன்” எனக் கூறினாராம். இது குறித்து முனியசாமி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்துக்கான நோட்டுகளை முனியசாமியிடம் கொடுத்தனர். அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட முனியசாமி, வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனை தனது செல்போனில் தொடர்பு கொண்டுப் பேசியுள்ளார். “நான் இப்போ அருப்புக்கோட்டையில இருக்கேன். அந்தப் பணத்தை என்னோட ஆபீஸ்ல இருக்குற கீழ்பாகம் வி.ஏ.ஓ உமேஷ் குமாரிட்ட கொடுத்திடுங்க “ எனச் சொல்லியுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இதனையடுத்து முனியசாமி, குளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த வி.ஏ.ஒ உமேஷ் குமாரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்து, ஆர்.ஐ. செந்தில்முருகனிடம் பணம் கொடுத்த விஷயத்தை செல்போனில் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், “மூணு லட்சம்தான பணம் கொடுத்திருங்கீங்க. மீதமுள்ள முப்பதாயிரம் பணம் எங்கே?” எனக் கேட்டுள்ளார். அதற்கு முனியசாமி, ”ரெண்டு நாள்ல தர்றேன் சார்” எனச் சொல்லியுள்ளார். இந்த உரையாடல்கள் அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார் முனியசாமி.

இந்த நிலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் அருகில் மறைந்திருந்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட போலீஸார் வி.ஏ.ஒ உமேஷ்குமாரை லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடித்து குளத்தூர் கீழ்பாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

சோதனையிட்ட அதிகாரிகள் வாகனம்

பின்னர், அருப்புக்கோட்டையிலிருந்த வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனையும் கைதுசெய்து அழைத்து வந்து அவரையும் விசாரணை செய்தனர். சுமார் 3 மணி நேரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/sGHviT5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*