இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம்; கொன்று புதைத்த கணவர் - கரூர் அதிர்ச்சி சம்பவம்

0

தனது மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட மனைவியின் அக்காவை சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கொன்று புதைத்த சம்பவம், கரூர் மாவட்ட மக்களை அதிர வைத்திருக்கிறது.

கொலை செய்த தனபால்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த உள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (34). மாட்டு வண்டி தொழிலாளியான இவரின் மனைவி மேனகா (28). மேனகாவின் அக்காள் அம்பிகா (30). இந்தநிலையில், அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில், தனபால் தனது முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக மேனகாவின் சகோதரி அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 29 -ம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இருந்த இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தனபால் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அம்பிகா

அங்கிருந்து இரண்டு நாள்கள் தலைமறைவான அவர் நேற்று வெள்ளியணை காவல் நிலைய போலீஸாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். மூன்று நாள்கள் கழித்து நேற்று மனைவியின் உடல் இருக்கும் இடம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனால், போலீஸார் பிரேதத்தை கைப்பற்ற சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் தெற்கு மேட்டுபட்டி கிராமத்தில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். கொலை நடந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள நீரில்லாத கிணற்றில் பிரேதம் இருப்பதாக கூறப்பட்டது.

மாலை நேரம் என்பதால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு உடல்கூறு ஆய்வுக்கு வந்தனர். இன்னொருபக்கம் போலீஸார், சம்பவ இடத்திற்கு குற்றவாளி தனபாலை அழைத்து வந்து, எந்த இடத்தில் மனைவியின் உடலை புதைத்தாய் என்று இடத்தை பற்றிக் கேட்டனர். தனபால் சுட்டிக்காட்டிய இடத்தில் தேட, கிணற்றில் இறங்கிய தீயணைப்புப் துறையினர், போலீஸார் தனபால் புதைத்த இடத்தில் அம்பிகாவின் உடலை கண்டுப்பிடித்து தோண்டி எடுத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

உடற்கூராய்வு செய்யப்படும் அம்பிகா உடல்

தோண்டி எடுக்கப்பட்ட உடலை சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் உடல்கூறு ஆய்வு செய்து, உறவினரிடம் ஒப்படைத்தனர். கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு நாள்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்துக்கு, அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இரண்டாவது மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் ஒருவர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம், அவரின் உறவினர்கள் மட்டுமல்லாது கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/odiTPr8
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*