நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில் பேசிய முதல்வர், ``நீங்கள் (உள்ளாட்சி பிரதிநிதிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்றால் அது சாதாதணமானது அல்ல. உங்கள் உழைப்பு, உங்கள் திறமை, உங்கள் தியாகம் போன்றவையே அதற்கு காரணம். இங்கு ஆண்களை விட, பெண்களே உள்ளாட்சி பொறுப்புகளில் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் உயிர் நாடி. மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சிகள். இங்குதான் மக்கள் பணியாற்ற பயிற்சியும், வாய்ப்பும் கிடைக்கும்.
தி.மு.கவை பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டுமானால், அது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கையில் தான் உள்ளது. ஒரு பொறுப்பு உங்களை தேடி வந்திருக்கிறது என்றால், அதை தக்க வைத்து கொள்வதும், தொடர்ந்து நீடிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. இன்று நமது செய்கைகள் வழியாகத்தான் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர். அதற்கு காரணம் நான் இட்ட ஒரே கையெழுத்து தான். அத்தகைய சக்தி படைத்த கையெழுத்தை மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு பயன்படுத்துங்கள்.
மாநகராட்சி மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகமல் பணியாற்ற வேண்டும். அது தான் இந்த மாநாட்டின் நோக்கம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனமாகவோ, முறைகேடாகவோ நடந்து கொண்டால், நான் சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன். உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளையும், விருப்பு வெறுப்புகளையும் மறந்துவிட்டு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பள்ளிப்படிப்பைவிட அரசியல் படிப்புதான் எனக்கு அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அரசியல் ஆர்வம் என்பது பதவிக்கு வரவேண்டும், மாலை மரியாதை வரவேண்டும் என்பதற்காக அல்ல. மக்களுக்காக பணியாற்ற வேண்டும், இந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அந்த முடிவுக்கு வந்தேன்.
ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி, அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது, பதவிகள் அல்ல, பாராட்டுகள் அல்ல, மலர் மாலைகள் அல்ல சிறைச்சாலைகள்தான் எனக்கு கிடைத்தது. சித்ரவதைகளைத்தான் நான் அனுபவித்தேன். துன்ப துயரங்கள் என்னை வரவேற்றது. திருமணமான ஐந்தே மாதத்தில் மனைவியை பிரிந்து மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டேன். கட்சியே வேண்டாம், அரசியலே வேண்டாம் என்று எழுதிகொடுத்துவிட்டு சென்றவர்கள் பலர் உண்டு. தி.மு.கவிலிருந்து விலகி கொள்கிறேன் என்று எழுதிகொடுத்தால், சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவதாக அப்போது கூறப்பட்டது. அப்படி, எழுதி கொடுக்க மறுத்தவன் நான். மற்றவர்கள் அவ்வாறு எழுதிகொடுக்கக்கூடாது என்றும் சொன்னவன் நான்.
சிறையில் இருந்து 1977-ல் வெளியே வந்தேன். சட்டமன்றத்துக்குள் முதன்முதலாக சென்றது 1989-ம் ஆண்டு. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்குள் செல்ல 12 ஆண்டு காலம் பிடித்தது. இதை எதற்காக கூறுகிறேன் என்றால், பொறுப்புகள் உடனடியாக கிடைத்துவிடாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மாபெரும் பேரியக்கம் திமுக. இங்கு பொறுப்புகள் என்பது சில ஆயிரம் பேருக்குத்தான் கிடைக்கும். கட்சிக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்து கடைசிவரை பொறுப்புகள் கிடைக்காமல் மறைந்துபோனவர்கள் உண்டு. இதற்கு மாறாக நீங்கள் ஒரு பொறுப்பை அடைந்திருக்கிறீர்கள். ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது என்றால் அதை போற்றி, பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்குத்தான் உண்டு. மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து அவர்களுக்கு சேவை செய்தால், நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதேநேரத்தில், நீங்கள் தவறு செய்துவிட்டால், உங்களைவிட்டு மக்கள் விலகுவார்கள். விலகுவதோடு மட்டுமல்ல, உங்களை புறக்கணிப்பார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமே இதுதான். புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு பயமோ, தயக்கமோ, கூச்சமோ இருக்கக்கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நேரடியாக நீங்களே கையாள வேண்டும். உங்களுக்கு தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடத்தில் நீங்கள் ஒப்படைத்துவிடாதீர்கள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கு அஞ்சாத நெறி கொண்டவர்களாக நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். நாம் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்க தாம்பூலத்தில் வைத்து இந்த ஆட்சியை நமக்கு தந்துவிடவில்லை. 50 ஆண்டு காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் தன்னமலற்ற உழைப்பால் கிடைத்த பலன் இது. என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த கட்சியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கோடிக்கணக்கான தமிழக மக்கள் என்னை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலம் தி.மு.கவின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/DNrW3SA
via
