``நீட் மசோதா கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது; உள்துறை அமைசகம் பதில்” - சு.வெங்கடேசன்

0

சமீபத்தில் நீட் தேர்வு நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ள நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு குறித்து மத்திய அரசிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது.

எம்பி சு.வெங்கடேசன்

இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டுள்ளதா? அதனுடைய தற்போதைய நிலை என்ன? ஒப்புதல் வழி முறையில் என்ன முன்னேற்றங்கள்? என்ன கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்படும்? என்று கேட்டு இருந்தேன்.

அதற்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அளித்துள்ள பதிலில், 'தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021" உள்துறை அமைச்சகத்திற்கு 02.05.2022 அன்று வந்து சேர்ந்தது.

நீட் தேர்வு

தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை.

அது போன்று ஒன்றிய அமைச்சகங்கள்/ துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தங்களின் கருத்துக்களை அளித்துவிட்டன. அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 முறையே பகிர்ந்து கொண்டு கருத்துக்களை, விளக்கங்களை கேட்டுள்ளோம்.

இது போன்ற பிரச்னைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும். ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது.' என்று தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்

கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. ஆளுநர் கடத்திய காலமே அதிகம். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பது தமிழ்நாட்டின் குரல். அது வெல்லும். வெல்லும் வரை நம் முயற்சிகளை தொடர்வோம்." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5BhJoOj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*