``நெல் வயலில் திருவள்ளுவர் உருவத்தை இதற்காகத்தான் உருவாக்கினேன்” - அனுபவம் இணையத்தில் வைரல் பகிரும் விவசாயி!

0





தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் பாரம்பர்ய நெல் ரகங்களை பயிரிட்டு வரும் நிலையில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தன்னுடைய வயலில் நெல்பயிரில் திருவள்ளுவர் உருவம் தெரியும் வகையில் நடவு செய்துள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நெற்பயிரில் திருவள்ளுவர் உருவம் வர வைத்த விவசாயி இளங்கோவன்

கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன். இவர் 10 வருடங்களுக்கு மேலாக பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார். இயற்கை விவசாயத்துக்கான மதிப்பைக் கொடுத்து அதற்கான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். மக்கள் நோயில்லாத வாழ்வு வாழ வேண்டும் என்றால் ரசாயன உரம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட பொருள்களை சாப்பிட வேண்டும் உள்ளிட்ட பலவற்றை வலியுறுத்தி தன்னுடைய வயலில் அரை ஏக்கரில் நெற்பயிரை புதுமையான முறையில் நடவு செய்து அசத்தியிருக்கிறார்.

இது குறித்து இளங்கோவனிடம் பேசினோம். ''எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நான் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தற்போது 4 ஏக்கர் நிலத்தை ஒத்திக்கு எடுத்து அதிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன்.பாரம்பர்ய நெல் ரகங்களான கருப்பு கவுனி,வாசனை சீரக சம்பா, தூய மல்லி, ஆத்தூர் கிச்சலி சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

வயலில் திருவள்ளுவர் உருவம்

விளைவித்த நெல்லை அரிசியாக்கி இடியாப்ப மாவு, புட்டு மாவு, அரிசி என மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகிறேன். ஒரு முறை என்னிடம் அரிசி உள்ளிட்ட எந்த பொருளை வாங்கினாலும் அதை பயன்படுத்தியவர்கள் அதனால் உடலுக்கு கிடைக்கும் பயனை உணர்ந்து தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர். இயற்கை விவசாயத்தில் விளைவித்த பொருள் மண்ணுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகள் அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் இயற்கை விவசாயத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை நாம் நடவு செய்யும் நெற்பயிரின் மூலமே ஏற்படுத்த வேண்டும் என சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தேன்.

இயற்கை விவசாயி இளங்கோவன்

அந்த வகையில் தற்போது உலக பொதுமறை நூலான திருக்குறள் பல்வேறு நாடுகளில் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு படித்து வருகின்றனர். திருக்குறள் மூலம் திருவள்ளுவர் புகழ் உலகம் முழுவதும் பரவி தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. திருக்குறளை உலகம் கொண்டாடுவதை போல் இயற்கை விவசாயத்தையும் உலகம் கொண்டாட வேண்டும் என கருதினேன்.

அந்த வகையில் வயலில் நடவு செய்யும் நெற்பயிரில் திருவள்ளுவர் உருவம் தெரிகிற வகையில் நெற்பயிரை நடவு செய்து திருவள்ளுவர் உருவத்தை வர வைத்துள்ளேன். இதற்கான தன் அரை ஏக்கர் நிலத்தில் குழி முறையை பயன்படுத்தி நேபாள நாட்டில் நெல் ரகமான சின்னார், மைசூர் மல்லி என இரண்டு ரகங்களை நடவு செய்துள்ளேன். பச்சை மற்றும் பிரவுன் நிறம் கொண்ட இந்த ரகங்களில் உருவம் நன்றாக தெரியும் என்பதால் இரண்டு ரகங்களை தேர்ந்தெடுத்தேன்.

வயல் நெற் பயிரில் திருவள்ளுவர் உருவம்

50 அடி நீளம், 45 அடி அகலத்தில் திருவள்ளுவர் உருவம் வரும் வகையில் கயிற்றை கட்டி மார்க் செய்து அதன் படி நடவு செய்திருக்கிறேன். குழி தட்டில் 210 குழிகள் இருக்கும். குழியில் தேங்காய் நார்களை வைத்து, உரமாக சாண எருவை பயன் படுத்தினேன். பின்னர் ஒரு குழிக்கு இரண்டு நெல் மணிகள் ஊன்றி பயிரிட்டேன். விதை நட்டு வளரத்தொடங்கிய பிறகு 30 நாட்களில் திருவள்ளுவர் உருவம் தெரியத் தொடங்கியது. தற்போது 68 நாட்கள் ஆகின்றன. நெல் பயிர்களில் பிரமாதமாக தெரியும் திருவள்ளுவர் உருவம் எனக்குள் சிலிர்ப்பை உண்டாக்கி வருகிறது.

இடைவிடாத பெரும் முயற்சிக்கு பிறகு தற்போது என் கனவு சாத்தியமாகியிருக்கிறது. பத்து நாட்களுக்கு பிறகு பயிர் வளர்ந்து பொன்னிறமாக மாறும் அதன் பிறகு என் வயலில் கம்பீரமாய் திருவள்ளுவர் தெரிவார். என் வயலுக்கு வந்து திருவள்ளுவரை பார்த்து பலரும் என்னை பாராட்டி வருகிறார்கள். சமூக வலை தளங்களில் இதனை பார்த்த வெளிநாட்டினர் கூட எனக்கு போன் செய்து பாராட்டி வருகின்றனர்.

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருவள்ளுவர் உருவம் தெரிகிற வகையில் பயிரிட்டேன். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. பலரும் இயற்கை விவசாயம் குறித்து கேட்டு தெரிந்து வருகின்றனர். இதனை அறுவடை செய்த பிறகு கிடைக்கும் நெல் மணிகளை விதை நெல்லாக பல விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறேன். இரண்டு கிலோ விதை நெல்லை கொடுத்து நான்கு கிலோ விதை நெல்லாக வாங்கி பல விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறேன்.

திருவள்ளுவர்

நெல் திருவிழாவில், எனக்கு நெல் ஜெயராமன் விருது வழங்கி கெளரவப்படுத்தினர். பாரம்பர்ய நெல் ரகங்களை பெருக்குவதற்காக அர்ப்பணிப்போடு அவர் உழைத்து பெரும் பங்காற்றியதன் மூலம் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. பாரம்பர்ய நெல் ரகங்கள் பெருகுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் நெல் ஜெயராமன். அவருடன் பயணித்து அவர் வழியில் வந்த நான் இயற்கை விவசாயத்தை பெருக்க அது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க திருவள்ளுவர் உருவம் தெரிகிற வகையில் நெல் பயிரிட்டுள்ளேன்'' என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/p84yiJm
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*