``ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பதை காலம்தான் முடிவு செய்யும்” - சொல்கிறார் கடம்பூர் ராஜூ

0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், செய்தி மற்றும் விளம்பரத்துறையின் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ-வை அ.தி.மு.கவின் மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அக்கட்சியில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அவர், மீண்டும் கோவில்பட்டிக்கு வந்தார். அவருக்கு நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ``தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் சொத்து வரியும், விலைவாசியும் உயர்ந்துவிட்டது. சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. தற்போது மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், பாமர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்கள். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போடுவது நியாயமல்ல.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

மத்திய அரசு மூலம் அழுத்தம் வந்தபோதும்கூட தமிழக மக்களின் நலன் கருதி அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்வாரியத்துக்குத் தேவையான நிதியை அரசு மானியமாக செலுத்தியது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டதை நாங்களும் ஏற்கவில்லை. இதுகுறித்து அ.தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொறுத்தவரை காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு பல பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்றன. ஆனால், இன்று காவல் துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. அந்தத்துறை, யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தெரியவில்லை. அ.தி.முகவிற்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியில் 98 சதவீதம் பேர் ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என்பதை முன்வைத்தோம். இது பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்குழு மேடையில் அவருக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

கடம்பூர் ராஜூ

ஆனால், அன்று அவர் தவறாக வழி நடத்தப்பட்டு விட்டார். பொதுக்குழுவிற்கு வராமல் தலைமைக்கழக அலுவலகம் சென்று விட்டார். தலைமைக் கழக அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டதால், பன்னீர்செல்வத்துக்கு இருந்த 2 சதவீத ஆதரவும்கூட தற்போது இல்லை. இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 100 சதவீத ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் உள்ளது. அ.தி.மு.க ஒரே தலைமைதான். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பதை காலம்தான் முடிவு செய்யும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/G6rwTM5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*