கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை; இடித்த திமுக பிரமுகரால் சர்ச்சை - நடந்தது என்ன?

0

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை, தி.மு.க பிரமுகர் இடித்துவிட்டதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

சாலை மறியல் செய்த மக்கள்

கரூர் மாவட்டம், வடக்கு பாளையம் பகுதியில் பேருந்து நிழற்குடை ஒன்று தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும், இந்த நிழற்குடையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு செல்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நகர பேருந்திற்கு ஏறி செல்லும் வகையில், இந்த பேருந்து நிழற்குடை, கடந்த 1996 - 2001 ம் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. பேருந்து நிழற்குடை தொடர்ந்து பயன்பட்டு வந்த நிலையில் இந்த பேருந்து நிழற்குடை அமைந்திருக்கும் பகுதிக்குப் பின்புறம் தி.மு.க தாந்தோன்றிமலை இளைஞர் அணி அமைப்பாளர் திருமூர்த்தி என்பவர் இல்லம் அமைந்துள்ளது.

போலீஸாருக்கும், மக்களுக்கும் வாக்குவாதம்

மேலும், இந்த பேருந்து நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் காலி இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பேருந்து நிழற்குடை அமைந்திருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி, கடந்த மாதம் 21 - ஆம் தேதி இரவோடு இரவாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு திருமூர்த்தி தரைமட்டமாக இடித்து அகற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த நிழற்குடையை பயன்படுத்தி வந்த மக்கள், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் திருமூர்த்தி, அந்த பேருந்து நிறுத்தத்தை மறுபடியும் கட்டித்தருவதாக கூறியதால், அந்த பிரச்னை அப்போதைக்கு ஓய்ந்திருக்கிறது. ஆனால், திருமூர்த்தி சொன்னபடி அந்த பேருந்து நிழற்குடையை இதுவரை கட்டி தராததால், வெகுண்டெழுந்த பொதுமக்கள், 200 க்கும் மேற்பட்டோர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தமிழக அரசே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழல் குடையை சட்டவிரோதமாக இடித்து அகற்றிய தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடு' என்று பதாகையில் எழுதி வைத்தனர். இதனால், சுமார் 2 மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மீண்டும் தொடங்கிய பணி

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, சர்வேயர் துறையை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகி இடத்தை அளந்தனர். அதனைத் தொடர்ந்து, 'பேருந்து நிழற்குடை ஏற்கனவே இருந்த அதே இடத்தில் கட்டித் தரப்படும்' என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதோடு, ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு பேருந்து நிழல் கூடை கட்டும் பணிகள் துவங்கிய நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிறுத்தத்தை, தி.மு.க பிரமுகர் ஒருவர் இடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விரோதமாக இடித்த கட்சி பிரமுகர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்த அரசு என கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/VfWu0b4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*