“அறிவில் சாதியும் அடங்கும்” மீண்டும் சர்ச்சையான ரஜினியின் பேச்சு - சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு | Caste is inclusive in Knowledge - Actor Rajinikanth creates controversy
சென்னை: சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சாதி முறைக்கு ஆதரவாக பேசியதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிரியா யோகா மூலம் 'இனிய வெற்றிகர வாழ்வு' என்ற பெயரிலான புத்தகத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர், "என்னை பெரிய நடிகர் என்று சொன்னார்கள். இது பாராட்டா அல்லது விமர்சனமா என்று எனக்கு தெரியவில்லை. ராகவேந்திரா, பாபா ஆகிய படங்களே எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்தன.

பாபா திரைப்படம் வெளியான பிறகு பலர் இமய மலைக்கு சென்றதாக கூறினார்கள். இந்த இயக்கத்தில் எனது ரசிகர்கள் பலர் சன்னியாசியாக மாறி உள்ளனர். ஆனால், இன்னும் நான் நடிகனாகவே இருக்கிறேன். இமயமலையில் கிடைக்கும் மூலிகைகளை சாப்பிட்டால் ஒரு வாரத்துக்கு தேவையான ஆற்றலும் வைட்டமின் சத்தும் கிடைக்கும்.
இவ்வுலகை விட்டு பிரியும்போது சொத்துக்களை சேர்த்து வைத்துவிட்டு செல்வதை விட நோயாளியாக செல்வதை தவிர்க்க வேண்டும். நாம் நோயாளியாக இருப்பதால் பிறருக்கு கஷ்டங்கள் வரலாம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்போதே போய் சேர்ந்துவிட வேண்டும். நானும் இரு முறை மருத்துவமனை சென்றுள்ளேன்.
அறிவு என்பது புத்தி, சிந்தனை, நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சாதி என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான். பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான். ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோசமோ இல்லை. ஏனென்றால் சந்தோசமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல.' என்று கூறினார்.
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் 2021 தேர்தலுக்கு முன்பாக அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்தார். அதற்கு முன்பாக அரசியலுக்கு வரப்போகிறேன் என்று பேசிய அவர், சிஸ்டம் சரியில்லை என்று சொன்னது தொடங்கி தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேசியது, துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்று கூறியது வரை பல்வேறு பேச்சுக்கள் விவாதத்திற்கு உள்ளாகின.
அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் தொடர்பாக எந்த கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். அவரது அரசியல் கருத்துக்களை தீவிரமாக விமர்சித்து வந்தவர்களும், அவரது நடிப்புத் திறனையும் சினிமாக்களையும் மீண்டும் கொண்டாடி வந்தனர். இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் சாதிக்கு ஆதரவாகவாக பேசியதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
Umn news Tamil
