பி.டி.ஆர் கார்மீது தாக்குதல்; பாஜக-விலிருந்து விலகிய சரவணன்! - நள்ளிரவு சந்திப்பில் நடந்தது என்ன?

0

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 பா.ஜ.க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகர பா.ஜ.க தலைவர் டாக்டர் சரவணன் பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் முற்றுகை

மதுரை மாவட்டம், டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்தார். அவருடைய உடல் 13-ம் தேதி காலை விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் ராணுவத்தினர் ஏற்பாடுசெய்த அஞ்சலி நிகழ்ச்சி நிரலில் ப்ரோடோகால்படி அமைச்சர், கலெக்டர், மேயர், எம்.எல்.ஏ, துணை மேயர், எஸ்.பி, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அஞ்சலி செலுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருவதாகச் சொல்லப்பட்டதால் பா.ஜ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியில் குவிந்தார்கள். மதுரை மாநகர தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க தலைவர்கள் அங்கு இருந்ததால் தொண்டர்களும் அஞ்சலி நிகழ்வு நடைபெறும் சாமியானாவுக்கு கீழேயே நின்றார்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ராணுவ வீரரின் உடல் அங்கு கொண்டுவரப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ பூமிநாதன், மேயர் இந்திராணி, கலெக்டர் என அரசு சார்பில் அனைவரும் வந்திருந்தனர்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தபோது சாமியானாவுக்குள் டாக்டர் சரவணனுடன் கும்பலாக நின்றுகொண்டிருந்த பா.ஜ.க-வினரை பார்த்து, ``அரசு நிகழ்ச்சியில் இவர்கள் எந்த தகுதியில் இங்கு அனுமதிக்கப்பட்டார்கள்?" என்று சத்தமாக கேட்க, பதிலுக்கு பா.ஜ.க-வினர் சத்தமிட, உடனே காவல்துறை அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் ப்ரோட்டோகாலில் இல்லாதவர்கள் அங்கு நிற்க வேண்டாமென்று பா.ஜ.க-வினரை வெளியேறுமாறு கூறினார்கள். அதற்கு பா.ஜ.க-வினர், ``நாங்கள் இங்குதான் இருப்போம். எங்கள் தலைவர் அஞ்சலி செலுத்த வருகிறார்" என்று வாக்குவாதம் செய்ய... அந்த இடமே பரபரப்பானது.

பிரச்னை நடக்கும்போது டாக்டர் சரவணன்

அப்போது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீண்டும் அவர்கள் பக்கம் சென்று, ``என்ன அங்க...என்ன அங்க..." என்று கேட்க, கட்சியினர் அவரை அமைதிப்படுத்தி பந்தலின் இன்னொரு பக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

ஆனால், பா.ஜ.க-வினர் அங்கிருந்து நகராமல், 'பாரத் மாதா கீ ஜே' என கோஷம் போட அந்த இடம் பதற்றமானது. பின்பு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து தொலைவில் செல்லுமாறு உத்தரவிட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோர் அங்குவர, சூழலை புரிந்துகொண்டு வாக்குவாதம் செய்த பா.ஜ.க-வினரை ஆர்.பி.உதயகுமார் சமாதானப்படுத்தினார். தி.மு.க-வினர்-பா.ஜ.க-வினர் இடையே கைகலப்பாகும் சூழல் அப்போது தடுக்கப்பட்டது.

அதன் பின்பு ராணுவ வீரரின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டதும் ப்ரோட்டோகால்படி அமைச்சர், கலெக்டர், மேயர், எம்.எல்.ஏ-க்கள் என அஞ்சலி செலுத்தினார்கள். உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை வந்துவிட அஞ்சலி செலுத்த கேட்டுக்கொண்டதால் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதோடு அவர் சிவகங்கை கிளம்பிச்சென்றார்.

வாக்குவாதம்

அந்த நேரத்தில் பா.ஜ.க-வினரில் ஒரு பகுதியினர் விமான நிலையத்தின் வெளியே அமைச்சர் கார் வரும்வரை காத்திருந்து முற்றுகையிட்டனர். எஸ்கார்ட் போலீஸ்காரர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முன் கோஷமிட்டபடி காரை கைகளால் தாக்கினார்கள். அப்போதுதான் சிலர் செருப்புகளை வீசினார்கள். பின்பு போலீஸார் கூடுதலாக வந்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்டவர்களை உடனே கைதுசெய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால், வீடியோ பதிவுகளை வைத்து குற்றவாளிகளைத் தேட ஆரம்பித்தது போலீஸ்.

பி.டி.ஆர் வீட்டுவாசலில்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன், "இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. பொதுமக்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் எங்கு சென்றாலும் நாங்கள் எதிர்ப்போம்'' என்றார்.

அன்று மாலை கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாள்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும், பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிண அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன்" என்றார்.

அமைச்சர் காரில் செருப்பு

இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் 6 பேர்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நள்ளிரவு அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜனைச் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்த டாக்டர் சரவணன், ``நடந்த சம்பவம் என்னை பாதித்துவிட்டது. அதனால்தான் அமைச்சரைச் சந்தித்து வருத்தம் தெரிவுத்தேன். பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியல், மத அரசியல் பிடிக்கவில்லை. அங்கிருந்து விலகப்போகிறேன். காலையில் ராஜினாமா கடிதம் அளிப்பேன். தி.மு.க என் தாய் வீடுதான். சேரும்போது உங்களுக்குத் தகவல் சொல்வேன்" என நள்ளிரவில் பி.டி.ஆர் வீட்டு வாசலில் வைத்து பேட்டி அளித்தார்.

ஒரே நாளில் எங்கேயோ ஆரம்பித்த பிரச்னை எப்படியோ முடிந்துள்ளது!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/43SgfHt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*