தென்காசி மாவட்டத்தில் சீசன் களைகட்டியிருக்கிறது. இதமான சாரலுடன் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அதனால் குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் ஏராளமானோர் குளித்து மகிழ்கிறார்கள்.
இந்த நிலையில் பழைய குற்றாலம் பகுதியில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான தனியார் ரிசார்ட் ஒன்று உள்ளது. அந்த ரிசார்ட்டில், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் பாதுகாவலராக பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் என்பவர் தங்கியிருந்துள்ளார். குற்றாலத்தில் நேற்றுடன் சாரல் விழா முடிவடைந்தது. அதனால் அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் தான் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன். அவர் பாதுகாவலராக சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருகில் உள்ள இசக்கி ரிசார்ட்டில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்புப் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த குற்றாலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தென்காசி எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார். ரிசார்ட்டின் உள்ளே செய்தியாளர்கள் உள்ளிட்ட யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள். தற்கொலை செய்த பார்த்திபன், தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா என்பது பற்றி போலீஸார் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் குற்றாலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/RUwD0go
via
