``ரெண்டு வாரம் முன்னதான் லீவுக்கு வந்துட்டு போனார்" - ராணுவ வீரர் லட்சுமணனின் உறவினர்கள் கண்ணீர்

0

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்த சம்பவம் மதுரை மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீரமரண செய்தி கேட்டு திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

வீரர் லட்சுமணன்

காஷ்மீரில் ரஜோரி அருகே அமைந்துள்ள ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து நமது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்தார்கள். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான லட்சுமணனும் ஒருவர்.

வீரர் லட்சுமணின் பெற்றோர்

இத்தகவல் தெரிந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமமே சோக மயமாகியுள்ளது. பல ஊரைச் சேர்ந்த மக்களும் இரங்கல் தெரிவிக்க நேற்று முதல் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

டி.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் - ஆண்டாள் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் ராமர், லட்சுமணன் என்று பெயர் வைத்தார்கள். அந்த வட்டாரத்தில் ராணுவ வேலைக்கு செல்வது பலருக்கும் லட்சியமாக இருந்ததால், இரண்டு பேருமே ராணுவ பணி தேர்வுக்கு சென்றனர். அதில் இளைய மகன் லட்சுமணனுக்கு வேலை கிடைத்தது. ராமர் தொடர்ந்து ராணுவப் பணிக்கு முயற்சி செய்து வருகிறார். லட்சுமணன் 3 வருடங்களுக்கு முன் ராணுவப்பணியில் சேர்ந்து பணியாற்றி வந்த நிலையில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

வீரர் லட்சுமணின் சகோதரர்

இது குறித்து நம்மிடம் பேசிய ஊர்க்காரர்கள், ``ரொம்ப துருதுருன்னு லட்சுமணன் இருப்பார். சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர வேண்டுமென்பது அவரின் ஆசை. அதன்படியே பயிற்சி எடுத்து தயாராகி சேர்ந்தார். ரெண்டு மாத லீவில் ஊருக்கு வந்து இருந்துவிட்டு ரெண்டு வராத்துக்கு முன்னாடிதான் காஷ்மீருக்கு சென்றார். ஊரில் உள்ள பசங்களிடம் ராணுவ வேலையில் எப்படி சேருவது, அதனால் என்ன மாதிரியான நன்மை என்பது குறித்து பேசினார். தினமும் இரவு வீட்டுக்கு போன் போட்டு அப்பா, அம்மாவிடம் பேசி விடுவார். இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல" என்றனர்.

வீரமரணமடைந்த லட்சுமணின் உடலை ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு 20 லட்ச ரூபாய் நிதி அறிவித்துள்ளது. லட்சுமணின் அண்ணன் ராமரும் ராணுவத்தில் சேர தயாராகி வருகிறார். ஆனாலும், லட்சுமணின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Utsf9M2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*