``நிதிஷ் குமாரைப் போல பாஜக-வை விட்டு வெளியேறுங்கள்” - முதல்வர் ரங்கசாமிக்கு திமுக அட்வைஸ்

0

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க-வுக்காக வேலை செய்யும் ஆளுநர் தமிழிசை உரையாற்றக் கூடாது என்று கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து, ``மக்களாட்சியின் மாண்பை குறைக்காதே.. ஆளுநர் பதவி கட்சிப் பதவியா.. ஆளுநரே பதவி விலகு.. மாநில அந்தஸ்து என்னாச்சி..” என்று கோஷமிட்டனர். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ஏ சிவா, ``புதுச்சேரி மாநிலத்துக்கு துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடியவர் என்பதால் புதுச்சேரி மக்களின் எண்ணங்களை ஒன்றிய அரசிடம் பிரதிபலிப்பார் என்றும் எதிர்பார்த்தோம். கடந்த ஒரு வருடமாக அதற்காக காத்தும் இருந்தோம்.

வெளிநடப்பு செய்த தி.மு.க எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அடிக்கடி டெல்லி சென்று பிரதமர், ஒன்றிய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசிவந்ததால், புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்றும் மூடப்பட்ட மில்களும், அரசு நிறுவனங்களும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்காததன் மூலம் அரசியலுக்காகத்தான் பிரதமரையும், ஒன்றிய அமைச்சர்களையும் துணை நிலை ஆளுநர் சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது.

வருவாய் இல்லாத புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,874 கோடி நிதி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.150 கோடி குறைத்து 1,724 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குத்தான் 5 மாதம் காத்து இருந்தீர்களா ? இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கே.வி.கே உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக ரூ.3,800 கோடி ஒன்றிய அரசு நிதி தரவேண்டியுள்ளது.

ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி தொகையில் 41% தர வேண்டும். ஆனால் தருவதோ வெறும் 23% மட்டுமே. அதுவும் கூட இந்த ஆண்டு ரூ.1,300 கோடி கிடையாது. துண்டு விழுவதால் புதியதாக வரி போடப்போகின்றார்களா, அல்லது தங்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் நிறுத்தப்போகின்றார்களா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். முதல்வர் பிரதமரை சந்தித்தால் நிதி கிடைக்கும் என்று கூறினீர்கள். தற்போது முதல்வரும் பிரதமரை சந்தித்து பேசி, கூடுதல் நிதி கேட்டும், மாநில அந்தஸ்து கேட்டும் மனு அளித்துவிட்டு வந்துள்ளார். பிரதமரை முதல்வர் சந்தித்த பின்னர் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி கூடுதலாக தரப்பட்டுள்ளது? புதுச்சேரியில் ஒன்றிய அரசின் வேண்டப்படாத ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனாலும் எதுவும் கிடைக்கவில்லை. முழுமையாக பா.ஜ.க ஆட்சி நடைபெற வேண்டும் என்று நினைக்கின்றது ஒன்றிய அரசு. பா.ஜ.கவின் பேச்சும், செயலும் வெவ்வேறாக உள்ளது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, இதனால் அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுத்துறைகளில் 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பட்ஜெட் என்பது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, தொடங்குவதுதான். ஆனால் இந்த அரசு சம்பளம் போடுவதற்கு அனுமதி பெறுவதற்காக மட்டுமே சட்டப்பேரவையை கூட்டுகிறது. புதுச்சேரிக்கு தேவையான நிதியை பெற்றுத் தராமல், மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்துகொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக பதவி விலக வேண்டும். பா.ஜ.கவால் பீகார் மாநில முதல்வராக இருந்த நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைமை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்படும். அதனால் நிதிஷ்குமார் போல புதுச்சேரி முதல்வரும் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/XxA57RQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*