கார்த்தி, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள `விருமன்' படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது மதுரையில் நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, படக்குழுவினர் பலரும் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது...
"முதலில் என் மகளுக்கு வாய்ப்பளித்த இயக்குநர் முத்தையாவிற்கு நன்றி. 'விருமன்' திரைப்படத்தின் கதை எனக்குத் தெரியாது. சூர்யா- ஜோதிகா தயாரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்ததும் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அவர்கள் இருவரும் தொடர்ந்து நல்ல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். திரைப்படத்தில் நடிப்பால் நம்மை மகிழ்விப்பது மட்டுமின்றி கல்வி போன்ற பல விஷயங்களில் சூர்யா சிறப்பாகப் பங்களித்து வருகிறார். கார்த்தியுடன் அதிதி நடித்தது மிகவும் மகிழ்ச்சி. விரைவில் சூர்யா போன்று கார்த்தியும் தேசிய விருது வாங்க வேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. கிராமம் சார்ந்த பாடல்களை ஃப்ரெஷ்ஷாக இசையமைத்துள்ளார் யுவன். இயக்குநர் முத்தையாவின் முந்தைய படங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவருடைய படங்களில் பெண் கதாபாத்திரங்களை மிக அழகாகச் சித்திரிப்பார் என்று கேள்விப்பட்டுள்ளேன். என் மகள் ஒரு சேஃப் ஹாண்ட்ஸில் இருக்கிறார் என்பதை எண்ணி சந்தோஷம்.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அருமையாக வேலை பார்த்துள்ளார்கள். என்னுடைய மகளைப் பற்றிக் கூறினால் அது ஒரு பெற்றோராகப் பேசியது போல ஆகிவிடும். ஓர் இயக்குநராகப் பார்த்ததில் அவள் ஒரு நல்ல என்டர்டெயினர். அவளுடைய வளர்ச்சி உங்களைப் போன்ற ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. அதிதிக்கு அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தலைமுறைகள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நம்மைப் பார்த்து சில விஷயங்களை கற்றுக் கொண்டால் போதும். ஏனென்றால் இன்றுதான் அவர்கள் நடிகை, நேற்றுவரை அவர்கள் விசில் அடித்துக் கொண்டாடிய ரசிகைதான்!” என்று பேசினார். பின்னர் படத்தின் டிரெய்லரை வெளியீட்டு மேடையிலிருந்து விடைபெற்றார்.
from தமிழ் சினிமா https://ift.tt/HPKhsjm
via Umn news Tamil
