``11 மணி நேரமாகச் சோதனை நடைபெற்றது; ஆனால், எல்லாமே வெள்ளையாக இருக்கிறது!" - விஜயபாஸ்கர் தந்தை

0

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக 2 முறை பதவி வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் குட்கா வழக்கு, ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா சோதனை என அடுத்தடுத்த ரெய்டுகளில் சிக்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 18.10.21-ம் தேதி வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி அளவுக்குச் சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.23.85 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி,136 கனரக வாகனங்களின் ஆவணங்கள்,19 ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன. அப்போது புதுக்கோட்டையில் மட்டும் 31 இடங்களில் சோதனை நடைபெற்றது.

விஜயபாஸ்கர்

இந்த நிலையில், தற்போது தேசிய மருத்துவக் குழுவின் விதிகளுக்கு முரணாக, திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு  விஜயபாஸ்கர் சான்று தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, சென்னை, சேலம், மதுரை, தேனி, திருவள்ளூர், தாம்பரம் உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் வந்த 7 போலீஸார் காலை 6 மணி முதலே சோதனையில் ஈடுபட்டனர். 

ரெய்டு

வீட்டில் விஜயபாஸ்கரின் தந்தை, தாய், சகோதரர் உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையில் சில கோப்புகளை மட்டும் போலீஸ் எடுத்துச் சென்றனர்.

முன்னதாக சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வெளியேவந்த விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, ``ஏதோ ஒரு பெட்டிசனை வாசித்துக் காண்பித்து அதைவைத்துக் கொண்டு சோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து எல்லா பீரோக்களையும் திறந்து காண்பித்தோம். எங்களிடம் எல்லாம் வெள்ளையாகவே இருக்கிறது" என்றார். 

விஜயபாஸ்கர்

ரெய்டு முடிவுக்குப் பின்னர் பேசியவர், ``அதிகாரிகள் கொண்டு வந்த பிரிண்டரை மட்டுமே எடுத்துச் சென்றனர். எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

இலுப்பூர் சுற்றுவட்டாரத்தில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரியில் கடந்த மூன்று நாள்களாக, வழக்கமாக நிறுத்தி  வைக்கப்பட்டிருக்கும் லாரிகள் உள்ளிட்டக் கனரக வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைத்தான் முதலில் ரெய்டு வரும் போலீஸார் எடுத்துக்கொள்வார்கள். இந்த நிலையில்தான், பல குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்களே இல்லாமலும் இருந்திருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/aVb3Sr5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*